Thursday, 5 November 2015

கீழ்சாதி இரத்தம் சாக்கடையல்ல

சிறுகதை

"கீழ்சாதி இரத்தம் சாக்கடையல்ல"

சுகன்யா தன் தந்தை கிறிஸ்டோபரின் மார்பில் படுத்திருந்தாள்...

எப்போதும் அவள் அப்படித்தான்.தாயில்லாத குழந்தையாதலால், அப்பாவின் மேல் சற்று அதிகமாகவே நேசம் வைத்திருந்தாள்.
 இரவு நேரங்களில் அப்பாவை கட்டிப்பிடித்தபடியே தான் உறங்குவாள்....

தந்தையின் மார்பில் கிடந்தவாறே, மழலைக்குரலில் கேட்டாள் "ஏன்ப்பா?சுந்தரம் அங்கிள்ட்ட நான் பழகுறது உங்களுக்கு பிடிக்கல?"

"அவனைலாம் அங்கிள்னே சொல்லாத"

"ஏன்ப்பா அவங்க ரொம்ப நல்லவங்க பா"

"ஐயோ! சுகி ,அவன் கீழ் சாதி மா...அவன்ட்டலாம் பேசி ஏன் செல்லம் என்ன கேவலப்படுத்துற?"

"எல்லா சாதிக்கும் ஒரே நிற இரத்தந்தான்னு எங்க மிஸ் சொல்லிருக்காங்கப்பா"

"சுகி சொன்னா புரிஞ்சிக்க மாட்ட?? அவன் இரத்தம் வேற; நம்ம இரத்தம் வேற.. அவன் உடம்புல ஓடுற இரத்தம்,சாக்கட மாதிரி.... எப்பவும் சாக்கடய சுத்தம் பண்ணுறதால, அவன் இரத்தமும் சாக்கட தான்...
இனிமே நீ அவன்கூட பேசக்கூடாது... அவனப்பத்தியும் பேசக்கூடாது... அவன்கிட்டயே போகக்கூடாது...
( www.praburathna.blogspot.com )


ஐந்து வயது சுகன்யாவுக்கு  எதுவும் புரியவில்லை; ஆனாலும் தலையாட்டினாள்.

அதுமுதல் சுந்தரத்தை பார்த்தாலே விலகிச்செல்ல ஆரம்பித்தாள். உண்மையில் அவளுக்கு சுந்தரத்தை பிடித்திருந்தது. ஆனாலும் அப்பாவுக்கு பயந்ததாலும்,"அவன் உடலில் ஓடுவது சாக்கடை" என்னும் அப்பாவின் பயமுறுத்தலாலும் சற்று விலகியே இருந்தாள்..

கிறிஸ்டோபர்க்கு மகள் தன் பேச்சை கேட்டதில் மிகுந்த பெருமிதம்…

எல்லாம் நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது, அந்த கோர விபத்துக்கு முன்புவரை..

விபத்தில் சுயநினைவை இழந்த கிறிஸ்டோபர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா்..
( www.praburathna.blogspot.com )


அங்கு அழுதுகொண்டே, தன் அத்தையுடன் சுகன்யா வந்தாள்...

அதற்கு முன்பே விஷயம் கேள்விப்பட்ட சுந்தரம் ஓடோடி வந்திருந்தான்...

அந்த மோசமான சூழ்நிலையிலும், சுந்தரத்தை கண்டவுடன் தன் முகத்தை திருப்பியபடி விலகிச்சென்று விட்டாள் சுகன்யா...

கிறிஸ்டோபர்க்கு உடனடியாக இரத்தம் தேவைப்பட்டது.

இரத்தம் கிடைக்க தாமதித்தபோது,சுந்தரம் முன்வந்து இரத்தம் கொடுத்தான்..

பார்த்துக்கொண்டேயிருந்தாள் சுகன்யா..

ஒரே நாளில் கிறிஸ்டோபர்க்கு நினைவு திரும்பியது...
கண் விழித்தவுடன் முதல்வேளையாக சுகன்யாவைப் பார்த்து கண்கலங்கியபடி அருகில் அழைத்தான்...

அந்த பிஞ்சுக்குழந்தை, தகப்பனின் அருகில் வராமல் முகம் சுழித்தபடியே ஓடியது...

அப்பாவுக்கருகில் வரவைக்க எல்லாரும் எடுத்த எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன....

பாவம்! கிறிஸ்டோபர்...தன் உடலில் ஓடும் சுந்தரின் இரத்தம் சாக்கடையல்ல என்று எப்படி தன் மகளுக்கு புரியவைப்பாரோ???!!
               
                                -----  K.Prabu Rathna

No comments:

Post a Comment