Showing posts with label மற்றவை. Show all posts
Showing posts with label மற்றவை. Show all posts

Thursday, 13 July 2017

என் ஜெபம் ஏன் கேட்கப்படவில்லை? unanswered prayers


என் ஜெபம் ஏன் கேட்கப்படவில்லை?

கேளுங்கள் தரப்படும் என்று இயேசு சொல்லியிருக்க, "நான் எவ்வளவோ கேட்டும் எனக்கு மட்டும் ஏன் இயேசு இந்த குறிப்பிட்ட விஷயத்தை தரவில்லை? எல்லாரும் ஜெபிக்கிறார்கள். பெற்றுக் கொள்ளுகிறார்கள். ஆனால் நான் மட்டும் எவ்வளவு நாள்தான் ஜெபிப்பது? தேவனுக்கு என்னை பிடிக்கவில்லையா? அவர் என்னை மட்டும் வெறுத்துவிட்டாரா? என் ஜெபம் அவர் காதுகளில் விழவில்லையா? "இப்படி பலவாறாக  வாலிபர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையிலேயே நம்முடைய ஜெபம் ஏன் கேட்கப்படாமல் போகிறது. நாமும் வேதம் வாசிக்கிறோம். தேவனுக்கு பிரியமாய் நடக்க முயற்சி செய்கிறோம். ஜெபிக்கவும் செய்கிறோம். ஆனால் அவரிடமிருந்து பதில் ஏதுமில்லையே? ஏன். 

ஜெபம் என்பது நாம் தேவனை மாற்றும் செயலல்ல.
தேவன் நம்மை மாற்றும் செயல்.


நம்முடைய ஜெபத்திற்கு பதில் கிடைக்காதபோது நாம் ஆராயவேண்டியது:

1. ஜெபிப்பது யார்?
2. ஜெபிப்பது யாரிடம்?
3. எதற்காக ஜெபம்?
4. எப்போது ஜெபம்? (தாமதிக்கும் பதில்)


முதலாவது, ஜெபிப்பது யார்?

      ஜெபிக்கும் நாம் யார்? என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். பிள்ளைகள் கேட்டால் அப்பா தருவார் என்பது உண்மையாயிருந்தாலும், கேட்கிற நாம் அவருடைய பிள்ளையாயிருக்க வேண்டுமே. அவரோடு நெருங்கியிருக்க வேண்டும். தேவைக்கு மட்டும் அவரைத் தேடாமல், எப்போதும் அவரோடு ஒரு ஐக்கியத்தைப் பராமரிக்கவேண்டும். இயேசுவை நேசிக்காமல், அவரை நமது தேவைகளுக்கான பாலமாக உபயோகப்படுத்துவோமென்றால், நம்மிடம் ஏமாறும் அளவிற்கு அவர் ஒன்றும் சாதாரண மனிதனல்ல. நம் இருதயத்தையே ஸ்கேன் செய்து பார்ப்பவர். இயேசுவை நேசிப்பதற்கும், அவரை  உபயோகப்படுத்துவதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.


நீதி 28:9 சொல்கிறது, வேதத்தை கேட்காதவனின் ஜெபம்
கேட்கப்படாதாம். வேதத்திற்கு கீழ்ப்படிந்து நாம் வாழவேண்டும். ஏசாயா 1:15 ல் சொல்கிறார், நீங்கள் எவ்வளவு ஜெபித்தாலும் கேட்கமாட்டேன் என்று. காரணம், அவர்கள் தேவனுக்கு பிரியமில்லாததைச் செய்தார்கள். வேதத்தைக் கேளுங்கள், தீமையை விட்டு விலகுங்கள், பாவங்களை கழுவி சுத்திகரியுங்கள் என்றெல்லாம் அதைத் தொடர்ந்து வருகிற வசனங்களில் தேவன் சொல்கிறார். நம்மைப் பற்றிய எந்த கவலையுமின்றி, ‘தேவன் எனது ஜெபத்தை மட்டும் கேட்பதில்லை. அடுத்தவருக்கு செவி கொடுக்கிறார்” என்று பரிதாப உணர்வு ஏற்படுத்த முயற்சித்தால், கடைசி வரை புலம்பிக் கொண்டிருக்கவேண்டியது தான். 

மறுபடியும் சொல்கிறேன், ஜெபம் தேவனை நாம் மாற்றுவது அல்ல,  தேவன் நம்மை மாற்றுவது. 

எனவே அவருக்கு பிரியமாய் நடந்து, வேதத்தின் வழி நடந்து, அவரை உண்மையாய் நேசிப்போம். பிறகு பாருங்கள், நம் மனவிருப்பத்தைக் கூட அவர் நிறைவேற்றுவாராம். மனதில் ஆசைப்பட்டதைக் கூட அவர் செய்வார்;.

இரண்டாவது ஜெபிப்பது யாரிடம்?


இதென்ன முட்டாள்தனமாக இருக்கிறது? இயேசுவிடம் தானே
ஜெபிக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? நீங்கள யாரிடம் கேட்கிறீர்கள் என்பதை மறுபடியும் ஒருவிசை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். 2 தீமோத்தேயு 1:12ல் நான் விசுவாசிக்கிறவர் இன்னார் என அறிவேன் என்று பவுல் சொல்கிறார். நாம் யாரிடம் கேட்கிறோமோ, அவர் யார் என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும். தடவியாகிலும் தம்மை கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மை தேடும்படி அப்படிச் செய்தார் என்று அப்போஸ்தலர் 17:27ல் பார்க்கிறோம். தடவியாகிலும் நாம் அவரை அறிந்துகொள்ளவேண்டும் என்று நம் தேவன் விரும்புகிறார். யோவான் 8:24 ல் நானே அவரென்று விசுவாசியாவிட்டால், உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்று கூறப்பட்டுள்ளது. எனவே நாம் யாரிடம் கேட்கிறோம் என்பதில் தெளிவு இருக்கவேண்டும். நாம் கேட்கும் நபர் எப்படிப்பட்டவர் என்பதை புரிந்துகொண்டால், விசுவாசம் தானாக வந்துவிடும். நம்மை சிருஷ்டித்தவர், பெயர் சொல்லி அழைத்து அறிந்திருக்கிறவர், அற்புதங்கள் செய்பவர், இயற்கைக்கு மேற்பட்ட சக்தி உடையவர் அவர் என்பதைப் புரிந்துகொண்டால், புது நம்பிக்கையோடு அவரிடம் எல்லாம் கேட்கலாம். நாம் கேட்கும் இயேசுவின் முந்தைய சாதனைகளை வேதத்தில் தேடிப் பாருங்கள். நமது தேவைகளெல்லாம் அவருக்கு சாதாரணம் என்பது புரியும்.

மூன்றாவது எதற்காக ஜெபிக்கிறோம்?


எதற்காக ஜெபிக்கிறோம் என்பது மிக மிக முக்கியம். சில நேரங்களில் நமக்கு தேவையில்லாதவற்றை கேட்டு கேட்டு கிடைக்காமல் சோர்ந்து போயிருக்கிறோம். நம்முடைய குறுகிய அறிவிற்கு எட்டிய வகையில் நாம் ஜெபிக்கிறோம். ஆனால் எல்லாம் அறிந்த தேவன் நமக்கு நன்மையானவற்றைத் தருகிறார்.

நாம் விரும்புவதை நாம் கேட்கிறோம்
தேவன் நமக்கு தேவையானதைத் தருகிறார்

நமக்கு நம்மின் கடந்தகாலமும், நிகழ்காலமும் தெரியும். தேவனுக்கோ நமது எதிர்காலமும் தெரியும். எனவே நமக்கு எதைத் தரவேண்டுமென்பது நம்மை விட அதிகமாக அவருக்குத் தெரியும். நமது ஜெபங்கள் கேட்கப்படாததற்கு பிண்ணனியில் சில நல்ல நோக்கங்களும் இருக்கலாம். 

இஸ்ரவேலர் தங்களுக்கு இறைச்சி வேண்டும் என்று மோசேயிடம் முறுமுறுத்தனர். தேவன் அவர்கள் ஜெபத்தை(!) கேட்டு அவர்களுக்கு இறைச்சி  கொடுத்தார். ஆனால் அது அவர்கள் வாயில் இருக்கும்போதே கோபத்தில் அவர்களில் பலரை அழித்துப் போட்டார் (எண்11ம் அதிகாரம்). இங்கு இவர்களின் ஜெபத்தை தேவன் கேட்டதால், இவர்கள் தேவனுக்கு பிரியமானவர்கள் என்றில்லை. 

அதே நேரம் மோசே பிறக்கும் தருவாயில், பிறக்கும்
ஆண்பிள்ளைகள் எல்லாம் கொல்லப்படவேண்டும் என்ற சட்டம் இருந்தது. மோசே வயிற்றில் இருக்கும்போது, மோசேயின் தாயாகிய யோகபேத்தின் ஜெபம் என்னவாக இருந்திருக்கும்? நமக்கு ஒரு பெண் பிள்ளை பிறந்தால் நன்றாயிருக்குமே என்று பெண் குழந்தைக்காகத் தான் ஜெபித்திருப்பாள். அவள் ஜெபம் கேட்கப்படவில்லை. பிறந்ததோ ஆண் குழந்தை. ஆனால் அந்த ஆண் குழந்தையைக் கொண்டு தான் இஸ்ரவேல் தேசமே மீட்கப்பட்டது. இங்கு தேவன் ஜெபத்தைக் கேட்காததால், தேவனுக்கு பிரியமானவள் இல்லை என்றாகிவிடாது.

பத்து வயது பையன் பல்சர் பைக் கேட்டால் நாம் வாங்கிக் கொடுப்போமா? அது  போல தான் சில நேரங்களின் நமது குழந்தை தனமான ஜெபங்கள் கேட்கப்படாமல் போகின்றன. 

நாமோ மீண்டும் மீண்டும் அவருக்கு சித்தமில்லாததையே கேட்டு
அவரை வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறோம்.  இஸ்ரவேலரை சபிக்கும் படி பிலேயாமை அழைத்த போது தேவன் அவரைப் போக வேண்டாம் என்று தடுத்தார். ஆனால் மீண்டும் போகலாமா? என்று தேவனிடம் கேட்டபோதோ போ என்று சொல்லிவிட்டு பின் உருவிய பட்டயத்தோடு வந்து தடுத்தார். சில நேரங்களில் நாம் தேவனுக்கு பிரியமில்லாதவற்றை விடாப்படியாகத் தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருந்தால், வேண்டாவெறுப்பாக தந்துவிடுவார். ஆனால் விளைவு மோசமாயிருக்கும்.  

நம்மைப் படைத்த தேவனுக்கு நம்மைக் குறித்த சித்தம் இருக்கிறது என்பதையும் ஜெபிக்கும்போது, நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

சிலர் ஜெபிப்பதை பெருமையாகக் கருதுவர். சாட்சியாகச் சொல்வதில் தவறில்லை. ஆனால் தம்பட்டம் அடிக்கக் கூடாது. நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.மத் 6:6.

ஜெபம் என்பது நமக்கும் தேவனுக்குமிடையேயான ஓர் உன்னத உறவு. அதை சரியான விதத்தில் பயன்படுத்த வேண்டும்;. அது வார்த்தைப் பிரயோகத்தைச் சார்ந்தது அல்ல. உள்ளத்தின் ஏக்;கம் சார்ந்தது. 

நம்மைச் சுற்றியிருக்கும் மற்றவரின்; கவனத்தை ஈர்க்க நாம் ஜெபித்தால் மற்றவரின் கவனத்தை தான் ஈர்க்கமுடியும், தேவனின் கவனத்தை அல்ல.

எப்போது ஜெபம்?


நீங்கள் ஜெபித்தது எப்போது? ஏனென்றால் சிலநேரங்களில் நமது ஜெபத்தின் பதில் நம்மை அடைவதற்கான சரியான நேரத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கும். நாமோ, ‘ஜெபத்திற்கு பதில் கிடைக்கவில்லை, தேவன் மோசம்”; என்று சொல்ல ஆரம்பித்துவிடுகிறோம். தேவன் தாமதிக்கிறார் என்றால் அதில் ஒரு அர்த்தம் இருக்கும். சரியான காரியத்தை சரியான நேரத்தில் செய்பவர் அவர். சில நேரங்களில் என்றோ ஒருநாள் நாம் ஜெபித்து நாம் மறந்துபோனபிறகு கூட ஜெபத்திற்கு பதில் கிடைத்திருக்கிறது.

தேவனின் பார்வையில் சரியான நேரம்,
நமது பார்வையில் தாமதமாகத் தோன்றலாம். 
ஆனால் அது சரியானதே.

இறுதியாக, 


தேவன் நம் ஜெபத்தை இன்றளவும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால் ஜெபம் கேட்கப்படவில்லையென்று நாம் உணர்ந்தோமென்றால், நம்மை சீர் தூக்கிப் பார்க்கவேண்டும், நமக்கும் அவருக்குமிடையேயான உறவு சரியாயிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும், நாம் கேட்கும் காரியம் சரியானது தானா? நிச்சயமாய் அது நமக்கு தேவைதானா? என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஜெபத்தின் பதில் நம்மையடைய சரியான நேரத்தை எதிர்பார்த்திருக்கிறதா? என்பதையும் யோசிக்க வேண்டும். ஜெபிக்கிறதை மட்டும் ஒருபோதும் நிறுத்தி விடாதீர்கள்.


நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார். மத் 21:22







Tuesday, 27 June 2017

பிக் பாஸ் - The Real Bigg Boss


அமெரிக்காவில் ஆரம்பித்து , இந்தியாவிற்கு வந்து, தற்போது தமிழக மக்களின் இதயத்துடிப்பை எகிறச் செய்யும் நிகழ்ச்சியாக பிக்பாஸ் தமிழிலும் வந்திருக்கிறது. வித்தியாசமான துறையில் உள்ளவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் கொண்ட கலவையாக 15 பேர் கொண்ட குழு ஒன்று தயார்செய்யப்பட்டு, அவர்கள் 100 நாட்கள் ஒரு வீட்டில் தங்கியிருக்கவேண்டும். அந்த 100 நாட்களும் செல்போன், டி.வி, இண்டர்நெட் போன்ற எந்த எலக்ட்ரிக் சாதனங்களும் பயன்படுத்த முடியாது. வெளியுலகத் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டு இருப்பார்கள். நிர்வாகத்தினர் பங்கேற்பவர்களுக்கு கொடுத்திருக்கும் பொருட்களைத் தான் பயன்படுத்த முடியும். 
இந்த 100 நூறு நாட்களில் அவர்களுக்குள் நடக்கும் மோதல், காதல் , வாக்குவாதங்கள் , தனிப்பட்ட நடைமுறைகள் எல்லாம் காரசாரமாக இருக்கும். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் வெளியேற்றப்படுவார். அநுசரிப்பது, மற்றவர்களோடு பழகுவது, பிறரை மகிழ்விப்பது, சமயோசிதமாக முடிவெடிப்பது போன்றவற்றின் அடிப்படையில் மக்கள் ஆதரவோடு ஒருவர் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். அவருக்கு பரிசுகளும், பணமும் உண்டு. 

இந்த ஷோவில் மிக முக்கியமான விஷயம், கழிப்பறை குளியலறை தவிர மற்ற எல்லா இடங்களிலும் கிட்டத்தட்ட 30 கேமராக்கள் அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணிக்கும். பேச்சுக்கள் எல்லாம் ஒட்டுக்கேட்படும். அவற்றில் முக்கியமானவற்றை டி.வியில் ஒளிபரப்பவும் செய்யும். பொதுவாகவே அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்று ஆவென்று பார்க்கும் தமிழக மக்களுக்கு , இந்த 100 நூட்களும் கொண்டாட்டம் தான். சரி பிக்பாஸ் பற்றி நான் எழுதியதன் காரணம் என்ன? விஷயத்திற்கு வருகிறேன்.
பிக்பாஸ் அல்லது பிக்பிரதர் நிகழ்ச்சி, ஏதோ ஒரு வீட்டிற்குள், 100 நாட்கள், 15 பேர், 30 கேமரா என்று நடைபெறுகிறது. ஆனால் உண்மையில்,நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையுமே பிக்பாஸ் நிகழ்ச்சி தான். 

பிக்பாஸ் நிகழ்ச்சியே நம்ம வாழ்க்கையின் மினியேச்சர் தான்.


நம்ம பிக்பாஸ் யாரு? வேற யாரு பாஸ_க்கெல்லாம் பாஸான இயேசு தான் நம்ம பாஸ{.இந்த உலகம் தான் அந்த வீடு. இயேசு நமக்கு தேவையான எல்லாவற்றையும் வைத்துவிட்டு பிறகு தான் மனிதனைப் படைத்தார். இந்த உலக வீட்டில் நமக்குத் தேவையான எல்லாமே இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் வீட்டிலுள்ள எந்த பொருளையும் சேதப்படுத்தக் கூடாதாம். ஆம் நாமும் இயற்கையை நாசமாக்காமல் வாழவேண்டும்.  பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.ஆதி 1:28

100 நாட்கள் நடக்கும் ஷோ, 80 வருடங்கள் நடக்கிறது. அந்த 80 வருடங்களில் நமக்கு தேவையானவற்றையெல்லாம் இயேசு நமக்கு தருகிறார். நமக்கு நிறைய பாடங்கள் கிடைக்கின்றன. மகிழ்ச்சியான, சோகமான சம்பவங்கள் நடக்கின்றன. மூத்தோரின் அனுபவங்கள் நமக்கு உதவியாகின்றன. எப்படியாவது நமது காலத்தை ஓட்டிவிட வேண்டும். அதுமட்டுமல்ல, போராடிக்கொண்டிருக்கும் மற்றவருக்கும் நாம் தான் உதவ வேண்டும். இயேசுவே வழி என்று காட்டவேண்டும். அதற்கும் மதிப்பெண்கள் உண்டு. சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை. அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது. சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.1கொரி 9:16

15 பேர் கொண்ட குழு , கிட்டத்தட்ட 700 கோடிக்கும் மேற்பட்ட மக்களாக இருக்கிறார்கள். அவர்களோடு நாம் வாழும் நாட்களில் நாம் அனுசரித்துப்  போகவேண்டியுள்ளது. நமக்கு மற்றவர்களின் நடவடிக்கை பிடிக்கிறதோ இல்லையோ, நாம் மற்றவர்களை சொல்லாலோ செயலாலோ காயப்படுத்தி விடக் கூடாது.  தேவன் நமக்கு நல்ல உறவுகளை, நண்பர்களை, நலம்விரும்பிகளைத் தந்திருக்கிறார். அவர்களோடு இருக்கின்ற காலத்தில் உறவாடவேண்டும். யாரையும் பகைத்து நமக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. நமது வாழ்வை வண்ணமயமாக்கவே தேவன் உறவுகளையும் மனிதத் தொடர்புகளையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார். காதல், மோதல் , வாக்குவாதம் , சண்டை, பொறாமை, பெருமை எல்லாம் இருக்கும் தான் . நாம் அதையெல்லாம் மேற்கொள்ள வேண்டும். உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக. உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பவைகளையே என்றார்.மத் 19:19

30 கேமராக்கள் அவர்களைக் கண்காணிப்பது போல, பல நூறு கண்கள் நம்மை கண்காணிக்கின்றன. தேவதூதர்கள் குறிப்பெடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். மற்ற மனிதர்களும் நம்மை கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். நாம் எதைச் செய்தாலும் அது பதிவாகிக்கொண்டே இருக்கிறது. யாருக்கும் தெரியாது என்று நினைத்துக் கொண்டு நாம் தனிமையில் செய்ததெல்லாமே ஒருநாளில் வெட்ட வெளிச்சமாகும். எல்லாம் தேவனுடைய கண்காணிப்பில் இருக்கிறது. அங்கு வேஷமெல்லாம் போடமுடியாது. நாம் எப்படி நடந்துகொண்டோமோ அப்படியே காண்பிக்கப்படுவோம். ஆகாயத்தில் ஏறிப்போனாலும், பாதாளத்தில் படுக்கை போட்டாலும் அவருடைய பார்வையிலிருந்து தப்ப முடியாது. கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது.2நாளா 16:9

சிலர் வெளியேற்றப்பட்டுக்கொண்டிருப்பார்கள். இது நமக்கு வேதனை தரக் கூடியதாக இருந்தாலும், நாம் நமது பாதையில் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும். சிலரின் பிரிவு நம்மை மிகவும் பாதிக்கலாம். சிலரைப் பற்றிய பழைய நினைவுகள் நமது இதயத்தை அரித்துக்; கொண்டிருக்கலாம். அதை எல்லாம் தூக்கிப்போட்டுவிட்டு நமது பாதையில் நாம் கவனம் செலுத்தவேண்டும். தேவனைத் தவிர , யாரையும் எப்போதும் அதிகமாக சார்ந்து கொண்டிருக்க கூடாது. கவனம், நாம் சார்ந்திருக்கிறவர்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியேற்றப்படலாம். மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.சங் 118:8

சிலநேரங்களில் நாமும் கூட வெளியேற்றப்படலாம். எப்போது நமது நாட்கள முடிகிறதென்று தெரியாததினாலே நாம் இருக்கின்ற காலத்தை பயன்படுத்துவது நல்லது. ஒருமுறை இந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டோமென்றால், பிறகு அங்கு திரும்பிச் செல்லவே முடியாது. அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,எபி 9:27

அநேக பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தினமும் நடைபெற்றுக்கொண்டே இருக்கும். கவனம், நமது நோக்கம் சிதறிப் போய்விடக் கூடாது. இந்த உலகத்தில் எல்லாவற்றையும் அனுபவிக்க நமக்கு அதிகாரம் இருந்தாலும், எல்லாம் நமக்கு தகுதியாயிராது. தகுதியானதில் மட்டும் கவனம் வைக்கவேண்டும். கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.பிலி 3:14

பரிசுப் பொருட்கள் , அந்த நாட்கள் முடிவடையும்போது, சிறப்பாக செயல்பட்டவருக்கு பரிசுப்பொருட்கள் வழங்கப்படும். பரிசு என்றால் சாதாரண பரிசு அல்ல. மிகச் சிறந்த பரிசு. நம்ம நிகழ்ச்சியில் வென்றால் நித்திய ஜீவன் பரிசாக அளிக்கப்படும். மட்டுமல்ல பொற்கிரீடங்களும், நவரத்தினங்களும் பரிசாக அளிக்கப்படும். நமது காலம் முடிந்தபிறகு தான் பரிசு கிடைக்கும் என்பதை கவனத்தில் வைக்கவேண்டும். இப்பொழுதே பரிசு வேண்டும் என்று அடம்பிடிப்பது அறிவீனம். தண்டனையோ பரிசோ வாழ்வு முடிந்தபின் நிச்சயம் உண்டு. இவ்வுலக வாழ்விலும் சில போனஸ் பாயிண்ட்ஸ் உண்டு. இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.வெளி 22:12


இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் , நம்ம பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் ஒத்துப்போகாத ஒரே ஒரு விஷயம் இருக்கு. அது , இந்த பிக்பாஸ் 100 நாள்னு ஒரு கணக்கு இருக்குது. ஆனா நம்ம நிகழ்ச்சில நம்ம பிக்பாஸ் எப்போ வேணா வருவேன்னு சொல்லிட்டு போயிருக்கிறாரு. அவர் வரும்போது என்னென்ன நடக்கும்னும் சொல்லியிருக்கிறாரு. அது எல்லாமே இப்போ நடந்திட்ருக்கு.அவர் வந்தவுடனே நிகழ்ச்சி முடிஞ்சிரும். எனவே இருக்கிறவரை உண்மையா இருப்போம். மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள். மத் 25:13


"நான் தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சில ஜெயிப்பேனு நம்பிக்க இருக்கு. ஏன்னா என் அப்பா ரொம்ப கஷ்டப்பட்டாரு எனக்காக. அவரு கைல காலுல எல்லாம் ஆணி அடிச்சாங்க. ஒரு பெரிய ஈட்டிய அவரு விலாவில குத்துனாங்க. ரொம்ப அடிச்சாங்க . ஆனா எல்லாத்தையும் அவர் எனக்காக பொறுத்துக்கிட்டாரு.  என் மேல ரொம்ப நம்பிக்க வச்சு  இந்த உலகத்துக்கு என்ன அனுப்புனாரு. அந்த நம்பிக்கைய வீணடிக்கமாட்டேன். நான் நிச்சயம் ஜெயிச்சு, பரிச அவர்ட்ட காட்டுவேன் . நான் அவருக்கு உண்மையா இருக்கிறதால ஜெயிச்சுருவேன்னு நம்பிக்க இருக்கு."

பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள். ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். 1கொரி 9:24

Wednesday, 23 December 2015

கிறிஸ்துமஸ் எப்படி கொண்டாடலாம்?

கட்டாயமாக கிறிஸ்துமஸ் கொண்டாடுபவர்களுக்கு மட்டும்


கிறிஸ்துமஸ் எப்படி கொண்டாடலாம்?

இயேசு எப்படி பிறந்தார் என்று தியானிப்பதை விடுத்து ஏன் பிறந்தார் என நோக்கலாம்.....

எந்த சூழ்நிலையில் அவர் பிறந்தார் என்பதை விட எந்த சூழ்நிலையை உருவாக்க அவர் பிறந்தார் எனப் பேசலாம்....

கோபுரத்தில் விளக்கேற்றுவதற்கு பதில் ஏழைகளின் வீடுகளில் விளக்கேற உதவலாம்.....

புத்தாடை அணிவதை விடவும் இல்லாதோர்க்கு அணிவிக்கலாம்....

எளிமை உணர்த்தும் குடிலை பெரு செலவில் உருவாக்குவதை விடவும் எளிமையானோர்க்கு இயன்றதைச் செய்யலாம்..

கேரல் ரவுண்டை காசு பிரிக்க அல்லாமல் இயேசு அறிவிக்க பயன்படுத்தலாம்...

பட்டாசு கொளுத்தி மகிழ்வதை விடவும் நமது பாவங்களைக் கொளுத்தி அவரை மகிழ்விக்கலாம்....
( www.praburathna.blogspot.com)

இயேசுவை தூங்க வைப்பதை ( அவர் தூங்குவதும் உறங்குவதுமில்லை) விட்டு விட்டு தூங்கிக்கிடக்கும் பலரின் மனக்கண்களை திறக்க முயற்சிக்கலாம்...

சுவிசேஷத்தை அறிவித்து பரலோகில் மகிழ்ச்சி உண்டாக்கலாம்.....

முதல் வருகையை ஒப்பிட்டு இரண்டாம் வருகை குறித்து விவரிக்கலாம்...
( www.praburathna.blogspot.com)

இயேசு தம்மைக் கொடுக்க உதித்த இந்நன்னாளில் நம்மை அவருக்களிக்கலாம்...நம்மிலுளதை பிறர்க்களிக்கலாம்..


இப்படிச் செய்வதே நீங்கள் கொண்டாடும் இயேசுவை குளிர்விக்கும்...


நல்ல இந்த விடுமுறை தினத்தை நன்மையாக பயன்படுத்துவோம் ......நன்றி..
                                 - Prabu rathna