மற்ற எல்லா வயதினரையும் விட வாலிப வயதினர் தான் பரிசுத்தத்தை கவனமாகக் காத்துக் கொள்ளும் அவசியம் இருக்கிறது. மனோபலமும் , உடல்தினவும், எதையும் செய்துபார்க்கும் எண்ணமும், அசாத்தியதுணிவும் வாலிபர்களுக்கு இருப்பதால் வாலிப வயதின் பரிசுத்தம் கேள்விக்குரியதாகி விடுகிறது. இன்றைய நவநாகரீக உலகமும் வாலிபர்களின் பரிசுத்தத்திற்கு வேட்டு வைப்பதற்காகவே முழுமுயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறது. பார்க்கிற, கேட்கிற, பழகுகிற எல்லாவற்றிலும் ஆபாசம் கலந்திருக்கும் இவ்வுலகில் வாலிபர்கள் பரிசுத்தமாய் வாழ்வது சாத்தியம் தானா? பரிசுத்தமாய் வாழ்ந்துவிட வேண்டுமென்று எவ்வளவோ விரும்புகிறேன், ஆனால் தொடர்ந்து அந்த குறிப்பிட்ட பாவத்திலே நான் விழுந்து விடுகிறேனே என்று சோர்ந்து போயிருக்கும் வாலிபர்களோடு தேவன் இன்று இடைபடுவாராக..
இன்று அநேக வாலிபர்கள் சொல்வது, என்னுடைய சுற்றுப்புறமும், நான் சார்ந்திருக்கும் நபர்களுமே என் பாவத்திற்கு காரணம் என்று. கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான். (ஏசா 48:14). பாபிலோன் என்பது துன்மார்க்கம் நிறைந்த இடம். எல்லா பாவமும் செய்ய அங்கே வாய்ப்பு உண்டு. ஆனால் கர்த்தருக்குப் பிரியமான ஒருவனால் பாபிலோனில் இருந்துகொண்டும் கர்த்தருடைய சித்தத்தை செய்ய முடியும். நம்முடைய சூழ்நிலையை காரணம் காட்;டி பாவம் செய்து விடக் கூடாது. நாம் எந்த இடத்தில் இருந்தாலும், நம்மைச் சுற்றி இருக்கிறவர்கள் யாராக இருந்தாலும் நம்மோடு தேவன் இருந்தால் நம்மால் பரிசுத்தத்தைக் காத்துக் கொள்ள முடியும். நீதிமானாகிய லோத்து ( 2 பேதுரு 2:8) என்று சாட்சிபெற்ற லோத்து இருந்த சோதோம் கொமோரா பட்டணங்கள் முழுக்க முழுக்க பாவம் நிறைந்த பூமி. ஆனால் அங்கே இருந்து கொண்டும் லோத்தால் நீதிமான் என்று பெயர் வாங்க முடியுமானால், நம்மாலும் பாவம் நிறைந்த நம் கல்லூரி நண்பர்களின் மத்தியில், பாவம் நிறைந்த அலுவலகத்தில், பாவம் நிறைந்த நம் கிராமத்தில் இருந்துகொண்டும் நீதிமான் என்று பெயர் வாங்கமுடியும். தேவனுக்கு விரோதமாக பாவஞ்செய்வதெப்படி (ஆதி 39: 9) எனும் யோசேப்பின் மனநிலை நமக்கு வருமானால் பாவத்தை விட்;டு விலகி ஓடக்கூடிய கிருபையை தேவன் நமக்குத் தருவார்.
பாவத்தின் மற்றுமோர் பிறப்பிடம் தனிமை. தனிமை தான் அநேகரின் பாவத்தை உரமிட்டு வளர்க்கிறது. மற்றவர் முன்பாக நாம் நீதிமான் போல் காணப்பட்டாலும் தனிமையிலே பாவத்திடம் தோற்றுப்போய் விடுகிறோம். வாலிப வயதில் தனிமை மிக கவனமான பேணப்படவேண்டியது. சிலரை மிக அழகாக உருவாக்கும். சிலரையோ அதளபாதாளத்திற்குள் தள்ளிவிடும். தனிமை நேரத்தில் சும்மா இருந்தால் பாவம் நம்மைக் கொத்திக் கொண்டு போய்விடும். நமக்கு பிரயோஜனமான ஏதாவதொன்றை செய்துகொண்டேயிருக்க வேண்டும். தேவனோடு உறவாட தனிமை நல்லதொரு தருணம். இயேசுகிறிஸ்து தனியாயிருந்து ஜெபித்தாராம். அதேபோல் நாமும் நம் தனிமையை தேவனோடு உறவாட, வேதத்தை தியானிக்க பயன்படுத்துவோமானால் அந்தரங்கத்தில் பார்க்கிற நம் பிதா நிச்சயமாய் வெளியரங்கமாய் பலனளிப்பார். தனிமையை சரியான விதத்தில் பயன்படுத்த முடியவில்லையென்றால் தனிமையாயிருப்பதைத் தவிருங்கள்.
வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுவதினால்தானே.சங் 119:9. வாலிபன் வசனத்தின்படி தன் இருதயத்தைக் காத்துக் கொள்ளும்போது பாவத்திலிருந்து விலகி பரிசுத்தமாகிறான். இருதயத்திற்குள் பாவம் நுழையாமல் இருக்க, அது நுழையும் வழிகளிலெல்லாம் வசனத்தால் காவலிடவேண்டும். உலக காரியங்கள் இருதயத்திற்குள் நுழையும் வழிகள், கண்கள், காதுகள், வாய். கண்களினால் நாம் பார்ப்பது இருதயத்தினுள் நுழைகிறது. காதுகளினால் கேட்பதும் சிந்தையைச் சேர்கிறது. அது போலவே வாயினால் பேசுவதும். வாயினால் நாம் பேசுவது அருகிலிருக்கும் நமது காதுகளுக்குச் செல்வதால்,( சிறுவயதில் வாயினால் சொல்லி சொல்லி படிக்கும்போது அது இருதயத்திற்குள் நுழைந்துவிடுமே). எனவே இம்மூன்று உறுப்புகளுக்கும் வசனத்தினால் காவல்போடும்போது நம் சிந்தையை பாவத்திற்கு விலக்கிப் பாதுகாக்கலாம். எந்த பாவமானாலும் இவ்விடங்களில் இருக்கும் வசனங்களை தாண்டியே உள்நுழைய முடியும்.
பரிசுத்தத்தின் முழுமாதிரியாய் தேவன் இருக்கிறார். நம் பரிசுத்தத்தின்மேல் நம்மை விட அதிக அக்கறையுள்ளவராக அவர் இருக்கிறார். நான் பரிசுத்தராயிருக்கிறது போல நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று வேதத்தில் அநேக இடத்தில் சொல்லியிருக்கிறார். என்னிடத்தில் யாதொரு குறையும் உங்களால் சொல்லமுடியுமா? என்று தைரியமாக கேள்வியெழுப்பிய பரிசுத்தப்புருஷனாம் இயேசுகிறிஸ்து நம்மை பரிசுத்தராக்குகிற கர்த்தராயிருக்கிறார். எனவே நாம் இயேசுவிடம் நம்மை பரிசுத்தப்படுத்தும்படியாய் கேட்போம். அவர் நம்மை பரிசுத்தமாக்குவார். பரிசுத்தத்தை வாஞ்சிப்போம். வேதத்தையும் தேவனையும்
அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும். அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும். நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும். பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. வெளி 22: 11,12

No comments:
Post a Comment