காதலர் தின ஸ்பெஷல் பதிவு
பிப்ரவரி 14 . எல்லா வருடமும் காதலர் தினமாக இது கொண்டாடப்பட்டு வருகிறது. மதம் , இனம், மொழி, வயது கடந்து அனைவராலும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏற்கனவே காதலிக்கலாமா பிரதர் என்னும் புத்தகத்தில் கிறிஸ்தவர்கள் காதலிப்பது குறித்து நாம் பல தலைப்புகளில் பேசியுள்ளோம் ( படிக்க இதை கிளிக் செய்யுங்கள் ).
காதலர் தினத்தில் தான், அநேகக் காதல்கள் புதுவடிவம் பெறுகின்றன. பிரிந்திருந்த காதல்கள் ஒன்றிணைகின்றன. ஒளித்து வைக்கப்படும் ஒருதலைக் காதல், ஒருவழியாக சொல்லப்படும். ஆடையின் நிறம் ஆளின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும். இந்த நாள் இளைஞர்களின் வாழ்வில் ஒரு வண்ணமயமான நாள். காதலிக்காதவர்களை கேவலமாகப் பார்க்கும் ஒருகூட்டம் வாலிபர்கள். மீம்ஸ் போட்டு கலாய்க்கும் ஒரு கூட்டம். காதலிக்காமல் கட்டுக்கோப்பாக இருப்பவனே ஒரு கணம், தான் இவ்வுலகில் வாழத் தகுதியற்றவனோ என சந்தேகிக்கும் நாள். நண்பர்கள், தோழிகள் தங்கள் காதலர்களோடு கொண்ட அனுபவங்களைச் சொல்லி கடுப்பேற்றுவார்கள். சமூக வளைத்தளம் மக்களின் மனதை எவ்வாறு பாதிக்கிறது என்பதை சமீப நாட்களில் நாம் பார்த்து தான் வருகிறோம். மொத்தத்தில் இந்த காதலர் தினம் கிறிஸ்தவ வாலிபர்களின் வாழ்வியலையும் பாதித்தே விடுகிறது.
சுற்றியுள்ள எல்லாரும் காதலிக்கிறார்களே. காதலிப்பது தான் வாலிபத்தை வெளிப்படுத்தும வழியா? பதின் வயதில் காதலிக்காதவர்கள் பிறரால் புறக்கணிக்கப்பட்டவர்களா? நல்லவர்களும் காதலிக்கிறார்கள், நான் காதலிக்காமல் இருப்பதன் பலன் என்ன? பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் உங்கள் மூளையை சுற்றி சுற்றி வருகிறதா? உங்களோடு சில நிமிடம் செலவழிக்க விரும்புகிறேன்.
எண் 25ம் அதிகாரத்தில் இது போன்றதொரு நிலை இருந்தது. இஸ்ரவேலரை தேவன் நேசித்துக் கொண்டிருந்தார். இஸ்ரவேலரை யாராலும் அழிக்க முடியவில்லை. அவர்களை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியமாக இருந்தது. அப்போது அந்த வாலிபர்களுக்கு விரோதமாக ஒரு சதி நடைபெற்றது. மோவாபிய பெண்கள் இஸ்ரவேலுக்குள் அனுப்பப்பட்டனர். அவர்களின் அழகில் மயங்கி வாலிபர்கள் அனைவரும் அந்த பெண்களோடே வேசித்தனம் பண்ணத் தொடங்கினர். பின் அந்நிய தேவர்களை சேவிக்க ஆரம்பித்தனர். தேவகோபம் அவர்கள் மேல் வந்தது. இந்த சம்பவங்களிலிருந்து நாம் கற்றுக் கொள்பவை: கர்த்தருக்குள் நிலைத்திருக்கும் வாலிபர்களாகிய நம்மை பிசாசால் வீழ்த்தமுடியாது. எனவே தந்திரமுள்ள அவன், தந்திரமாய் நம்மை வீழ்த்த வேறு சதி வேலையில் ஈடுபடுவான். வேறு எதினாலும் வீழ்த்தமுடியாத வைராக்கிய வாலிபர்களை வீழ்த்த பிசாசு கடைசியாக கையில் எடுக்கும் ஆயுதம், பெண் (ஆதாம் முதற்கொண்டு, சிம்சோன், தாவீது, சாலமோன் என பலரும் வீழ்ந்தது இதில் தான்). பொதுவாக முறையில்லாமல் பெண்ணின் மேல் வரும் நேசம் தேவனை விட்டுப் பிரித்து விடும் (ஆதாமை, சிம்சோனை, சாலமோனை). பின் தேவகோபம் வரும்.அப்படிப்பட்ட பெலவீன நேரத்தில் பிசாசு விழத்தள்ளி விடுவான்.
இது போன்ற நிலை அன்றும் வந்தது. இப்போது எல்லா வாலிபர்களும் காதலியோடு சுற்றுவதைப்போல், அன்று எல்லாரும் மீதியான பெண்களோடு நேசம் வைத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு வாலிபன் மட்டும் தேவனுக்கென்று வைராக்கியமாய் நின்றான். அவன் பினெகாஸ். மற்ற வாலிபர்களின் செயல் அவனைப் பாதிக்கவில்லை. மற்றவர்களைப் போல அவன் தனக்கு ஒரு துணை தேடவில்லை. மற்ற வாலிபர்களுக்கு அழகிய மீதியானிய ஸ்தீரிகளைப் பார்க்கும்போது ஏற்படும் வெறி இவனுக்கு ஏற்படவில்லை. ஆனால் இவனுக்குள் வேறு விதமான வைராக்கிய வெறி இருந்தது. ஈட்டியை எடுத்து விபச்சாரம் செய்தவர்களை குத்திப்போட்டான். மிகப் பெரிய வாதை நிறுத்தப்பட்டது. தேவ கோபம் இஸ்ரவேலரை விட்டு நீங்கியது. தேவனோடு நித்திய உடன்படிக்கை ஏற்பட்;டது.
இதை வாசிக்கும் அன்பு வாலிபர்களே, ஒன்றைப் புரிந்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அழைக்கப்பட்டது மற்ற வாலிபரைப் போல இருப்பதற்காக அல்ல. மற்ற வாலிபரை மீட்பதற்காக. பிற வாலிபரிடம் இருந்து கற்றுக்கொள்வதற்காக அல்ல. அவர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்காக. காலம் கடைசியாய் இருக்க தேவன் சார்பில் வைராக்கியமாய் நிற்க பினெகாஸ்களை தேடிக் கொண்டிருக்கிறார். நீங்களும் பிறரும் ஒருபோதும் சமமானவர்கள் கிடையாது.
எல்லா மன்னர்களும் பல மனைவிகளை வைத்திருந்தார்கள். பல கொலைகள் செய்தார்கள். ஆனால் தாவீதை மட்டும் தேவன் தண்டித்ததற்கு காரணம், மற்ற மன்னர்களைப் போல தாவீதிடம் தேவன் எதிர்பார்க்கவில்லை. தேவனிடத்தில் சாட்சி பெற்றிருந்தவர் தாவீது. தேவனிடத்தில் சாட்சி பெற்ற, அழைப்பைப் பெற்ற நமக்கும் பிறருக்கும் வித்தியாசம் இருக்கிறது. நமக்கான நியாயத்தீhப்பிற்கும், பிறருக்கான நியாயத்தீர்ப்பிற்கும் வேறுபாடு இருக்கிறது.
எபி 11: 40 ன் படி நாம் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களையும் பூரணப்படுத்துகிறவர்கள். அப்படிப்பட்ட சாட்சியை தேவனிடத்தில் பெற்ற நாம், ஓடுவோம்; வேகமாய் இயேசுவுக்காய். பிறரை நோக்காமல், பிறர்க்குரியதைப் பாராமல் இயேசுவையே நோக்கி ஓடுவோம். நம் இளமையைக் குறித்து ஒருவரும் அசட்டை பண்ணாத வாழ்க்கை வாழ்வோம்.
மற்றவர்களால் நம்மை மாற்றமுடியுமானால், நம்மாலும் பிறரை மாற்றமுடியும்.
வாலிபரே பொல்லாங்கனை நீங்கள் ஜெயித்ததினால் உங்களுக்கு எழுதுகிறேன். 1யோவான் 2:13




