கொரோனாவிலும் கொடிய நோய்
இப்போது நம்முடைய வாயில் நாம் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு வார்த்தை 'கொரோனா". ஒருவேளை இந்த வார்த்தை நம்முடைய வாயில் எளிதில் நுழையாததாய் இருக்கலாம். ஆனால் இதனை உண்டாக்கும் வைரஸ் மிக எளிதாக நுழைந்து விடுகிறது. நுழைந்த வைரஸ் அமைதியாக இல்லாமல், வேகமாக வேலை செய்து அதிகபட்சமாக மரணம் வரை கொடுத்து விடுகிறது. இது பரவும் வேகம் தான் இப்போதைக்கு பெரும் ஆபத்து. நான் இந்த கட்டுரையை எழுதும் இந்நேரம் இந்த வைரஸ் கொன்றிருக்கும் மனிதர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1,00,000 க்கும் மேல் (இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்பது மிகப்பெரும் அச்சம்)
இது வெறும் வியாதியாக மட்டும் வராமல், பெரும் அச்சுறுத்தலாகவே வந்துவிட்டது. கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரி. வியாதி இருப்பதற்கான வெளிப்புற அடையாளம் பெரிதாக இல்லை. நாம் பேசும், பழகும் நபருக்கு தொற்று இருக்கிறதா என்று தெரியவில்லை. மிகவும் வேகமாக பரவும் அபாயம். தினந்தோறும் செய்திகளில் கேள்விப்படும் மரணங்கள். வாரக்கணக்கில் ஊரடங்கு உத்தரவு. வெளியே செல்ல முடியாமல் முடக்கம். நமக்காக அல்லாவிட்டாலும், குடும்பத்தினருக்காகவாவது நம்மை பாதுகாக்க வேண்டிய அவசியம். இவ்வாறு இந்த தொற்று நமக்குள் கலவையான குழப்பங்களையும், மனரீதியான அழுத்தத்தையும் உண்டாக்கிவிட்டது என்றே கூறலாம்.
ஒருவகையில் இந்த வியாதி நமக்கு நிறைய பாடங்களைக் கற்றுத் தந்திருக்கிறது. பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தவர்களை அமர்ந்து சிந்ததிக்க வைத்திருக்கிறது. பணத்தை விடவும் இந்த உலகில் நாம் சம்பாதிக்க வேண்டியவைகள் அதிகம் இருக்கிறது என்று புரிய வைத்திருக்கிறது. நாம் வாழும் இந்த இயந்திர உலகம் நிரந்தரமில்லை என்று நம்ப வைத்திருக்கிறது. நாம் போடும் திட்டங்கள், தேவசித்தமிருந்தால் மட்டும் வாய்க்கும் என்று உணர வைத்திருக்கிறது. குடும்பத்தினரோடு பாசமாய் பழக வைத்திருக்கிறது.
ஆனால் இன்னொரு புறம் இது ஏற்படுத்திய பாதிப்பு அளவிட முடியாதது. வியாதியால் கொத்து கொத்தாய் ஜனங்கள் மரிப்பது ஒருபுறம். குடும்பத்தினர் கொஞ்சம் கொஞ்சமாய் மரிப்பதைப் பார்த்தும், கையறு நிலையில் இருக்கும் உறவினரின் வேதனை ஒருபுறம், தங்கள் அன்றாட வேலை தடைபட்டதால் ஜனங்கள் அனுபவிக்கும் பொருளாதார நெருக்கடி ஒருபுறம்.
இப்படி கொரோனா மிக வேகமாய் பரவி பலரை பாடாய் படுத்தி வருகிறது. எனக்கு தெரிந்து இந்த தலைமுறையில் இந்தளவு பாதிப்பை ஏற்படுத்தியது இந்த கொரோனா தான். ஆனால் இதை விட மோசமான ஒரு வியாதியைப் பற்றி நான் உங்களுக்கு சொல்லுகிறேன். அது பரவும் வேகம் அபாயகரமானது. அது மனிதர்களை வீழ்த்துவதையே தன் குறிக்கோளாய் வைத்திருக்கிறது. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மனிதர்களை கொன்று குவிக்கிறது. அந்த வியாதியின் பெயர் பாவம். ஆம் பாவம் (தேவனுக்கு விரோதமான தவறுகள்).
பாவம் என்கிற இந்த வியாதி கண்ணுக்கு தெரியாதது. இது ஒரு தொற்று வியாதி. ஒரு நபரிடமிருந்து இன்னொரு நபருக்கு மிகவேகமாக பரவக்கூடியது. இது, தான் ஆக்ரமிக்கும் நபர்களையெல்லாம் ஆட்டிப்படைத்து அவர்களை ஆவிக்குரிய மரணத்திற்கு நேராக வழிநடத்தும் வல்லமை படைத்தது. இது இந்நாள்வரை உலகில் கொன்று குவித்திருக்கும் ஜனங்களின் எண்ணிக்கை பல கோடி. இன்னமும் ஆத்துமாவை அழித்துக் கொண்டிருக்கிறது.
யாரிடம் இருக்கிறது யாரிடம் இல்லை என்று அவ்வளவு எளிதில் கண்டறிய முடியாது. மிக பரிசுத்தவான்கள் போல இருப்பார்கள். ஆனால் ரகசிய பாவத்தில் விழுந்து கிடப்பார்கள். இந்நிலை மிக ஆபத்தானது. இவர்களால் சமூகத்தில் இத்தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
கண்ணுக்கு தெரிந்த எதிரியிடமிருந்து தப்புவது எளிது, கண்ணுக்கு தெரியாத எதிரியிடமிருந்து தப்புவது கடினம்.
இது ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு நபருக்கு வெகு எளிதில் தொற்றிக் கொண்டு விடும். அதனால் தான் வேதம் பாவிகளின் வழியில் நில்லாதே என்று நம்மை எச்சரிக்கிறது. போகிறபோக்கில் ஒரு மனிதரின் மனதிலிருந்து வேறு மனிதரின் மனதிற்குள் ஊடுறுவி விடும். மற்றவர் தொடர்ந்து செய்வதைப் பார்க்கும்போது, நம் மனதும் அதை நியாயப்படுத்த ஆரம்பித்து விடும். எனவே தான் நாம் நம்முடைய நடக்கைகள் எல்லாவற்றிலும் வேதாகமத்தையே மாதிரியாகக் கொள்ள வேண்டும்.
பாவம் என்கிற இந்த வியாதி தொற்றியவுடன் வெளியே தெரிந்து விடாது. அதேபோல் திடீரென்று பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும். எந்த பரிசுத்தவானும் ஒரே நாளில் பெரிய பாவியாகிவிடுவதில்லை. கொரோனா எவ்வாறு 14 நாட்களுக்கு பின்னர் தன்னை வெளிப்படுத்துகிறதோ, அது போல பாவமும் இச்சை மூலம் கர்ப்பந்தரித்து வளர்ந்து சில காலத்திற்கு பின்னர் தன்னை வெளிப்படுத்தும். வேதத்தின் மிக முக்கிய கதாபாத்திரமான தாவீது தன் வாழ்வில் பெரும் பாவம் ஒன்றை செய்து விட்டார். திடீரென்று செய்யவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக செய்தார். முதலில் ராஜாக்கள் யுத்தத்திற்கு போகும் காலம் வந்தபோது போகவில்லை முதல் பாவம். பின்னர் உப்பரிகையின் மேல் தேவையில்லாமல் உலவியது இரண்டாவது பாவம். பத்சேபாளை இச்சித்ததும், அவளை அழைத்து வந்ததும், தவறாக நடந்ததும் அதைத் தொடர்ந்து வந்த பாவங்கள். பின்னர் உரியாவை கொல்ல திட்டம் தீட்டியது பெரும்பாவம். இவ்வாறு பாவம் சிறியதாகத் தொடங்கி பின்னர் பூதகாரமெடுக்கும். எனவே தான் சிறிய பாவத்திற்கும் நாம் விலகியிருக்க வேண்டியது அவசியமாகிறது.
பாவத்தில் பெரிய பாவம் சிறிய பாவம் என்று இல்லை. எல்லாமே ஆபத்தானது தான்.
கொரோனா எதிர்ப்பு சக்தி குறைந்தோரை எளிதில் தாக்குவதைப் போலவே, பாவம் என்கிற வியாதியும் விசுவாசம் குறைந்தோரை மிக எளிதில் வீழ்த்திவிடுகிறது. சிலருக்குள் அது நுழைந்தாலும், அவர்களுக்குள் இருக்கும் விசுவாசம் அந்த பாவத்தை விரட்டி விடும். ஆனால் இன்னும் சிலருடைய அவிசுவாசமே அந்த பாவத்தை இழுத்து தன்னகத்தே வைத்துக் கொள்ளும். எனவே எதிர்ப்பு சக்தியாகிய நமது விசுவாசத்தை அநுதினமும் தட்டியெழுப்பும் ஆவிக்குரிய உணவாகிய வேதவசனத்தை தினமும் உட்கொள்ளுவது பலன் தரும்.
பாவத்தின் சம்பளம் மரணம். அதாவது ஒரு மனிதன் பாவம் என்கிற வியாதியை தனக்குள் அனுமதித்து அதில் லயித்திருக்கும்போது அது நிச்சயமாக மரணத்தைக் கொண்டு வரும். அது ஆத்தும மரணம். ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம். ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள் (மத்தேயு 10:28) என்று வேதம் எச்சரிக்கிறது. நாம் கொரோனாவைக் கண்டு பயப்படுவதை விடவும் அதிலும் கொடூரமான ஆத்தும மரணத்தைக் கொண்டுவரும் பாவத்தைக் கண்டு அஞ்சி, அதற்கு விலகி வாழ அதிக பிரயாசப்பட வேண்டும்.
சரி. பாவத்திற்கு அடிமைப்பட்டு விட்டவன் இனி என்ன செய்வது? தப்ப வழியே இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம். கொரோனாவுக்கும் பாவத்திற்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசம். பாவத்தை முற்றிலும் கழுவி சுத்தப்படுத்த பரிபூரண மருந்து ஒன்று உண்டு. அந்த ஒரு மருந்துக்கு மட்டும் பாவம் கட்டுப்படும், கழுவப்படும். அது இயேசு கிறிஸ்துவின் இரத்தம். நியாயமாய் நாம் அடைய வேண்டிய மரணத்தை பாவமறியாத இயேசு நமக்காக ஏற்றுக் கொண்டதினிமித்தம், அவர் இரத்தத்தின் மூலம் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
இனிமேல் பாவம் செய்ய மாட்டேன் என்று உறுதி எடுத்துக் கொண்டு, இயேசுவின் இரத்தத்தினால் பாவமன்னிப்பு பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் ஆத்துமா கர்த்தரை விட்டு பிரியாது. நமக்கு கொரோனா வந்து விடுமோ என்று அஞ்சுவதை விடவும், பாவம் வந்து தேவனுக்கும் நமக்கும் இடையிலான உறவைக் கெடுத்து விடுமோ என்று அஞ்சுங்கள். அதை விட இது கொடியது.
முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான் (மாற்கு 13:13).






