Saturday, 4 February 2017

காதலிக்கலாமா பிரதர் - பகுதி 5

ஏற்கனவே காதலித்துக் கொண்டிருக்கும் நான் என்ன செய்வது?

கட்டாயமாக முந்தைய பதிவுகளைப் படித்துவிட்டு இதைப் படியுங்கள்.





              கிறிஸ்தவர்கள் காதலிக்கலாமா என்னும் தலைப்பின் கீழ் பல்வேறு தலைப்புகளில் நிறைய காரியங்கள் பேசியிருக்கிறோம். இப்போது நமக்கு முன் இருக்கும் அதி முக்கிய தலைப்பு ஏற்கனவே காதலித்துக் கொண்டிருக்கும் நான் என்ன செய்வது?   காதலிப்பது வேதத்தின்படி தவறென்று தெரியாத காலத்தில் காதலிக்க ஆரம்பித்து விட்டேன். ஆண்டவருக்காகவும் வேதத்திற்காகவும் என்னை எவ்வகையிலும் மாற்ற தயாராக இருக்கிறேன். இப்போது நான் என்ன செய்வது? திடீரென காதலியை(காதலனை) கைவிட்டால் அது நான் அவர்களுக்கு செய்யும் துரோகம் போலாகுமே? நான் என்ன தான் செய்வது? இப்படிப்பட்ட குழப்பமான மனநிலையில் நீங்கள் இருப்பீர்களானால், உங்களுக்கானது தான் இனி வருவது.

                            பொதுவாகவே மற்ற பாவங்களிலிருந்து வெளிவருவதற்கும் காதலிலிருந்து வெளி வருவதற்குமிடையே பெரிய வித்தியாசம் இருக்கிறது. எல்லா பாவங்களும் நாம் தனியாகவே செய்து கொண்டிருப்போம். விழிப்புணர்வு ஏற்பட்டவுடன் தப்பித்துவிடுவது எளிது. ஆனால் காதலில் நாம் மட்டும் விழித்துக் கொண்டால் போதாது. நம்மவரையும் எழுப்பி விடவேண்டும். இல்லாவிட்டால் பெரிய சிக்கலாகி விடும். சிலர் காதலித்துக் கொண்டிருப்பார்கள். ஜெபக் கூட்டத்திற்கு செல்லும்போதோ அல்லது எப்படியோ தேவனிடம் தங்களை ஒப்புக்கொடுத்து விடுவார்கள். உடனே தங்கள் காதலுக்கு முழுக்கு போட்டு விடுவார்கள். தங்கள் காதல் துணையிடம் இனி நான் இயேசுவின் பிள்ளை. இனி என்னை பார்க்க வராதே என்று ஈஸியாக சொல்லிவிடுவார்கள். அதில்தான் பிரச்சனையே இருக்கிறது. இவர்கள் மனம் காதலிக்கக்கூடாது என்பதில் பக்குவப்பட்டிருக்கும். ஆனால் இவர்கள் துணை என்ன செய்வார்கள்? திடீரென்று காதல் தடைபட்டதால், தற்கொலைக்கோ கொலைக்கோ முயல்வார்கள்.(வாலிபர்கள் தற்கொலை செய்வதில் காதல் தோல்வி முக்கிய காரணம் என்பதை மறந்து விடக்கூடாது.ஆசீட் வீச்சு போன்ற கொடூர காரியங்களுக்கும் இதுதான் காரணம்) விரக்தியோடு புலம்பிக் கொண்டு இருப்பார்கள். தேவன்தான் அல்லது அந்த பாஸ்டர் தான் தன் காதல்  தோல்விக்கு காரணம் என்று நினைத்து தேவனை அல்லது பாஸ்டரை வெறுத்துவிடுவார்கள். அவர்கள் வாழ்வில் தேவன் இடம்பெறுவது குதிரைக் கொம்பாகிவிடுகிறது.எனவே காதலை விட்டு முழுவதுமாக விலகுவதற்கு  முன் நீங்கள் செய்ய வேண்டிய சில அவசர காரியங்கள் இருக்கிறது.
                              காதலை உதறும்போது நீங்கள் கவனிக்க வேண்டியது, பாதிக்கப்பட்ட நீங்கள் விடுதலையாகி விட்டீர்கள். இதே பாதிப்பில் இருக்கிற உங்கள் துணையையும் நீங்கள் தான் விடுதலையாக்கி விட வேண்டும். திராட்டில் விட்டுவிட்டு செல்வது சரியான தீர்வாக இருக்க முடியாது. அவர்களை சீர்படுத்த வேண்டியது உங்கள் கடமை. அந்த கடமையை உங்களை விட யாரும் சிறப்பாக செய்து விட முடியாது. இப்போது நீங்கள் செய்ய முடிந்த ஒரு காரியம் காதல் மயக்கத்திலிருந்து நீங்கள் எப்படி விடுபட்டீர்களோ, அதே வழியை அவர்களுக்கு அறிவிப்பது. ஏனென்றால் நீங்கள் காதலில் எந்தளவு மூழ்கியிருந்தீர்களோ அதே அளவு தான், அவர்களும் இருந்திருப்பார்கள்(இருவரும் தானே காதலித்தீர்கள்) உங்களை அந்த உணர்விலிருந்து விடுதலையாக்குவதற்கு முயன்று வென்ற செய்தியோ, புத்தகமோ, நபரோ அல்லது வேறு எதுவோ உங்களளவு பாதிப்பிலிருக்கிற உங்களவரையும் விடுதலையாக்க முடியும். அப்படியானால் நீங்கள் எதனால் காதலை தவறென்றீர்களோ அந்த காரணத்தை அவர்களுக்கும் புரிய வையுங்கள். நீங்கள் ஏன் பிரிகிறீர்கள் என்பது அவர்களுக்குப் புரியட்டும். புரியாத பிரிவு மிக அதிக காயத்தை ஏற்படுத்தும்.                            
                              அடுத்ததாக நீங்கள் செய்ய வேண்டியது இயேசுவை அவர்களுக்கு அறிமுகம் செய்வது. இயேசுவைப் பற்றிய சரியான அறிமுகம் பாவங்களிலிருந்து விடுதலையாக உதவும் (இயேசுவைப் பற்றித் தெரிந்தவராக இருந்தாலும், அவரது அன்பின் பரிபூரணத்தைப் புரிய வைக்கவேண்டும்) . இயேசுவைப்பற்றி கூற உங்களுக்கிருக்கும் நல்ல வாய்ப்பை பயன்படுத்துங்கள்(வேறொருவர் சொல்வதை விட நீங்கள் சொல்வது அதிகம் எடுபடும்) ஆத்தும ஆதாயம் செய்ய என்னை அனுப்பும் என்று பாடிக் கொண்டிருக்கிற நாம், கையில் இருக்கிற ஆத்துமாவை வீணாய் விட்டு விடக் கூடாது.இயேசுவை அவருக்கு சரியாய் நீங்கள் அறிவித்து விட்டால், நீங்கள் அவனை(ள) தவிர்க்க வேண்டுமென்கிற தேவை வராது. அவனே(ள) உங்களை தவிர்த்து விடுவான்(ள்).
  இயேசுவைப் பற்றி அதிகம் பேசுங்கள். வசனங்களைப் பேசுங்கள். நான் ரொம்ப லோன்லியா ஃபீல் பண்றேன் என்று சொன்னால், நான் இருக்கிறேன் கவலப் படாதே என்று சொல்லாமல், இயேசு இருக்கிறார் எல்லாம் பார்த்துக் கொள்வார் என்று கூறுங்கள். இது போன்று இயேசுவை முக்கியப்படுத்தி நாம் பேசும்போது, பிசாசின் கிரியைகள் எல்லாம் நிர்மூலமாகி விடும். வசனங்களைப் பேசினாலும் பிசாசு தோற்றுப் போவான். (இருவரும் இணைந்து ஜெபிக்காமலிருப்பது நல்லது, ஜெபிக்கும்போது ஏற்படும் ஒருமனம், உங்களை இன்னும் நெருக்கமானவராகக் காட்டிவிடும்).
  அவர்களுக்காக ஜெபிப்பது மிக அதிக பலனளிக்கும். இயேசுவே என்னைக்குறித்து அவரும், அவரைக்குறித்து நானும் நினையாதிருக்க கிருபை தாரும். இருவரும் உம்மையே நோக்கிக்கொண்டிருக்க உதவி செய்யும் என்று தேவனிடம் ஒப்புக்கொடுத்து ஜெபித்தால், இயேசு கிறிஸ்;து இரங்கிக் கிருபை செய்வார். பிரிவதற்கேற்ற சரியான காரணத்தையும், சூழ்நிலையையும் அவரே உருவாக்கி, இருவரின் வாழ்வியலிலும் பிரச்சினை இல்லாமல் பாதுகாப்பார்.
                               எப்படியும் அவரைத்தான் திருமணம் செய்ய வேண்டும். எனக்கு எல்லாவகையிலும் பொருத்தமானவர் அவர் தான் என்று உங்கள் மனம் சொன்னால், பிரச்சனையே இல்லை. திருமணத்தைப் பற்றி பேசும்போது வீட்டில் தைரியமாக அதைப் பற்றி சொல்லுங்கள். ஆனால் அதுவரை அதிகம் பழகாமலிருப்பதே நல்லது. திருமணத்திற்கு முன் ஆத்மார்த்தமாக பழகும் அநேக ஜோடிகள் திருமணத்தில் இணைவதில்லை. திருமணத்திற்கு பின் தான் காதலிக்கவேண்டும் என்று வேதம் கற்றுத்தரும்போது, நாம் ஏன் அதற்கு முன் காதலிக்கவேண்டும்? கிடைத்தற்கரிய இந்த வாலிப பிராயத்தில் நேசர் இயேசுவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே எல்லாவகையிலும் சிறந்தது.
காதலிலிருந்து விடுபட்டவுடனேயே உங்கள் மனதை வேறு எதிலாவது தீவிரமாக நாட்டம் கொள்ள வைத்திருப்பது மீண்டும் அச்சிந்தனை வராமல் தடுக்கும். அது இயேசுவின் மேலும் வேதத்;தின் மேலும் இருந்தால், சிறப்பு. பிரிந்து பின் இணையும் உறவுகள் முந்தையதை விட வலுவாகும் எனும் உண்மையை நினைவில் கொள்ளல் அவசியம்.
  மிக மிக முக்கியமான ஒன்று, நாம் காதலிக்கவேண்டாம், இனி நட்பாகத் தொடரலாம் என்று எந்தவிதத்திலும் அந்த உறவோடுத் தொடர்ந்து ஐக்கியம் வைக்க வேண்டாம். அது நாளடைவில் மீண்டும் நம்மை விழத் தள்ளிவிடும். காதலிக்;கவேண்டாம் என்று முடிவெடுத்த பிறகு, அம்முடிவில் உறுதியாக இருந்து, மெதுவாக அதே சமயம் உறுதியாக, தேவபெலத்தோடுப் போராடுங்கள். வெற்றி நிச்சயம்.
  ஆங், இன்னொன்று சொல்ல மறந்துட்டேன், நான் தேவனை நம்பி இவள(ன) விட்டுவிடுகிறேன், எனக்கு இதுபோல என்னை நேசிக்கக் கூடிய மனைவி(கணவன்) கிடைப்பார்களா என்று கவலைப் படாதீர்கள். தேவனுக்காக நீங்கள் எதை இழந்தாலும், அதை விட நூறு மடங்காய் மறுமையில் மட்டுமல்ல, இம்மையிலும்  தருவார் (மத் 19:29, மாற்; 10:30). இதை விட பல மடங்கு உங்களை நேசிக்கக் கூடிய வாழ்க்கைத்துணையை தேவன் நிச்சயம் உங்களுக்குத் தருவார் (அவருக்காகத் தானே உங்களின் சிறப்பானதை இழக்கிறீர்கள்.அவர் சும்மாவா விடுவார் உங்களை? ) உங்களின் எதிர்காலம் நன்றாக இருக்கப்போவது நிச்சயம். யாருக்குத் தெரியும் உங்கள் உண்மையைப் பார்த்து இவர்களையேக் கூட உங்களுக்கு தேவன் லீகலாகத் தரலாம் (ஆபிரகாம் ஈசாக்கை தேவனுக்காக விட்டுக்கொடுக்கத் துணிந்ததும், தேவன் ஆபிரகாமுக்கு அதே ஈசாக்கை ஆசீர்வதித்துத் திரும்பக் கொடுத்துவிட்டார்). எல்லாவற்றிற்கும் தயாராய் தேவனை மட்டும் சார்ந்திருங்கள்.



No comments:

Post a Comment