ஸ்டாப் வந்திருச்சு
'ஸ்டாப் வந்திருச்சி" என்று கத்தினான் சுகுமார். அவனது கால்கள் தன்னிச்சையாக செருப்பைத் தடவி தேடின. அதேநேரத்தில் அவனது கைகள் அவனது உடைமைகளை உறுதியாய் பிடித்திருந்தன. 'டேய் ஏண்டா அவசரப்படுற? கொஞ்சம் பொறு, பஸ் நிக்கட்டும்" என்று சொன்ன தந்தையை பொருட்படுத்தாமல் காலணிகளை அணிந்து கொண்டு, எழுந்திருக்க எத்தனித்தான். அவனது அப்பா ரவிக்கு கண நேரத்தில் பேருந்தில் நடைபெற்ற சம்பவங்கள் நினைவுக்கு வந்தன.
'வெள்ளரிக்கா, வெள்ளரிக்கா" ஒரு பெண் ஜன்னல் வெளியே நின்று சத்தமிட்டதும், 'அப்பா எனக்கு வேணும்ப்பா" என்றான். இப்படித் தான் அவர்களின் பேருந்து பயணம் ஆரம்பித்தது. ரவியும், அவரது மகன் சுகுமாரும் சற்று தூரத்தில் உள்ள தங்களது சொந்த ஊருக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள். சுகுமாரின் எண்ணமெல்லாம் அந்த ஊரைப் பற்றியே இருந்தது. ஆனாலும் போகிற வழியில் பேருந்தில் விற்பதை யெல்லாம் வாங்கிக் கொண்டான்.
'அப்பா, அப்பா" ஊர் வர இன்னும் நேரமிருக்கிறது என்பதால் சற்று கண்ணயர்ந்த தந்தையின் தோளைப் பிடித்து எழுப்பினான். 'என்னடா" எரிச்சலுடன் ரவி கேட்டார். 'வெளியே பாருங்கப்பா, தண்ணீ ஓடுது, எவ்ளோ அழகாயிருக்குது பாருங்க". சிறிது நேரம் கழித்து தந்தையிடம் அப்பா பசிக்குது என்றான். பையில் வைத்திருந்த தின்பண்டங்கள் பயன்பட்டன. இன்னும் கொஞ்சம் நேரத்தில் ஜன்னலருகே பார்த்துக் கொண்டே சற்று கண்ணயர்ந்து விட்டான்.
'சுகுமார், சாப்பிட ஏதாவது வேணுமாடா?" என்ற சத்தத்தைக் கேட்டு கண்விழித்த சுகுமார், பேருந்து வழியில் உள்ள பேருந்து நிலையத்தில் நிற்பதை உணர்ந்தான். இருவரும் கண்ணைக் கசக்கிக் கொண்டே இறங்கி டீ பன் சாப்பிட்டுவிட்டு மறுபடியும் பேருந்தில் ஏறினர். வழியெங்கும் இருந்த பச்சைப் புல்வெளிகளை ஆனந்தத்துடன் பார்த்துக் கொண்டே வந்தான். இடையில் முன் சீட்டில் இருந்த ஒரு சிறுவனிடம் கண்ணாலேயே சண்டையிட்டான்.
'அத கொஞ்சம் எடுத்துக் குடுங்கப்பா" என்றதும் ரவி குனிந்துப் பார்த்தால், சிறிய கார் பொம்மை கீழே கவிழ்ந்து கிடந்தது. இதை எப்போது கொண்டு வந்தான் என்று நினைத்தபடி அதை எடுத்துக் கொடுத்தார். அதை பெற்றுக் கொண்டதும், பேருந்துக்குள்ளேயே தன் கைகளில் வைத்து கார் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தான். ரவி இதையெல்லாம் தன் மனதில் அசைபோட்டபடி இருந்தபோது தான், சுகுமாரின் சத்தம் மறுபடியும் ரவியை நிகழ்காலத்திற்கு கொண்டுவந்தது.
'ஸ்டாப் வந்திருச்சு அப்பா வாங்க இறங்கலாம்". சுகுமாரின் மனது யோசித்தது. இவ்வளவு நேரம் இருந்த சுகுமாரின் எந்த செயல்களும் இப்போது அவனிடம் இல்லை. தின்பண்டங்கள் உண்டது, விளையாடியது, சண்டையிட்டது, தூங்கியது எதுவுமே இப்போது அவன் செய்யவில்லை. அவனது கவனமெல்லாம் இறங்குவதிலேயே இருந்தது. எதற்கு அடுத்து ஸ்டாப் வரும் என்று அவனுக்கு தெரிந்திருந்தது. அதை தவறவிட்டால் என்ன ஆகும் என்றும் தெரிந்திருந்தது.
'இப்போ எந்திரி, போலாம்" என்றபடி ரவி சுகுமாரை அழைத்துக் கொண்டு உடைமைகளையெல்லாம் எடுத்துக் கொண்டு இறங்கினார். அந்த நிறுத்தத்தில் இருந்து வீட்டிற்கு போக சிறிதுதூரம் நடக்க வேண்டும். நடக்கிறவழியில் யோசித்துக் கொண்டே வந்தார். தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை யோசித்தார். உலகம் தன் இறுதி சுற்றை சுற்றிக் கொண்டிருப்பதையும், இன்னும் சில காலத்தில் உலகத்தின் ஓட்டம் நிற்கப் போவதையும் பற்றி நினைத்தார்.
'ஸ்டாப் வந்திருச்சி" ஆனாலும் மக்கள் யாரும் அதை உணராமல் இருக்கிறார்களே. இன்னமும் புசிக்கிறார்கள், குடிக்கிறார்கள் பெண் கொள்கிறார்கள் பெண் கொடுக்கிறார்கள். இதெல்லாம் தவறு அல்ல. ஆனால் இயேசுவின் வருகை வரும் நேரத்தில் அதற்கு ஆயத்தமாகாமல் இன்னமும் ரசித்துக் கொண்டும், ருசித்துக் கொண்டும் இருப்பது தவறு தானே.
'நாமெல்லாம் நித்திரையடைவதில்லை" (1கொரி 15:51) என்று பவுல் விசுவாசத்தோடு சொல்லி, அதற்கு ஆயத்தமாயிருந்தாரே. ஆனால் இன்றைய ஜனங்கள் தேவ வருகையின் அடையாளங்கள் நிறைவேறுவது தெரிந்தும், தயாராகாமல் இருக்கிறார்களே. இயற்கை சீற்றங்கள், பூமியதிர்ச்சிகள், கொள்ளை நோய்கள், பஞ்சம், கலகம், யுத்தம் இவையெல்லாம் நம் பயணம் முடியப்போவதற்கான அறிகுறிகள் தானே. இவற்றைக் கண்டும் கேட்டும் பழைய வாழ்வையே வாழ்ந்தால், எப்படி அவரது ராஜ்யத்தை சுதந்தரிக்க முடியும்.
'இனி காலம் செல்லாது" வேதம் தெளிவாகக் கூறிவிட்டது. இப்போது வெள்ளரிக்காய்களும், விளையாட்டுக் கார்களும், சிறு சண்டைகளும், தின்பண்டங்களும், குட்டித்தூக்கமும், சுட்டித் தனமும் செயல்பாட்டில் உள்ள காலமல்ல. ஆயத்தப்பட வேண்டிய காலம். ஆதாயப்படுத்த வேண்டிய காலம்.
'ஸ்டாப் வந்திருச்சு" என்று கத்திய தன் சுகுமார், தேவ எச்சரிப்பை சொல்வதாகவே உணர்ந்தார் ரவி. சிறுவன் சுகுமாருக்கு இருக்கும் உள்ளுணர்வு எல்லாருக்கும் இருந்தால் நன்றாயிருக்குமே. ஆம் உண்மையில் நமக்கான 'ஸ்டாப் வந்திருச்சு" நாம் ஆயத்தமா?
அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர்
சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள். (மத்தேயு 24:33)
அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார்.(லூக்கா 12:40)
அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார்.(லூக்கா 12:40)



No comments:
Post a Comment