என் ஜெபம் ஏன் கேட்கப்படவில்லை?
கேளுங்கள் தரப்படும் என்று இயேசு சொல்லியிருக்க, "நான் எவ்வளவோ கேட்டும் எனக்கு மட்டும் ஏன் இயேசு இந்த குறிப்பிட்ட விஷயத்தை தரவில்லை? எல்லாரும் ஜெபிக்கிறார்கள். பெற்றுக் கொள்ளுகிறார்கள். ஆனால் நான் மட்டும் எவ்வளவு நாள்தான் ஜெபிப்பது? தேவனுக்கு என்னை பிடிக்கவில்லையா? அவர் என்னை மட்டும் வெறுத்துவிட்டாரா? என் ஜெபம் அவர் காதுகளில் விழவில்லையா? "இப்படி பலவாறாக வாலிபர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையிலேயே நம்முடைய ஜெபம் ஏன் கேட்கப்படாமல் போகிறது. நாமும் வேதம் வாசிக்கிறோம். தேவனுக்கு பிரியமாய் நடக்க முயற்சி செய்கிறோம். ஜெபிக்கவும் செய்கிறோம். ஆனால் அவரிடமிருந்து பதில் ஏதுமில்லையே? ஏன்.
ஜெபம் என்பது நாம் தேவனை மாற்றும் செயலல்ல.
தேவன் நம்மை மாற்றும் செயல்.
நம்முடைய ஜெபத்திற்கு பதில் கிடைக்காதபோது நாம் ஆராயவேண்டியது:
1. ஜெபிப்பது யார்?
2. ஜெபிப்பது யாரிடம்?
3. எதற்காக ஜெபம்?
4. எப்போது ஜெபம்? (தாமதிக்கும் பதில்)
முதலாவது, ஜெபிப்பது யார்?
ஜெபிக்கும் நாம் யார்? என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். பிள்ளைகள் கேட்டால் அப்பா தருவார் என்பது உண்மையாயிருந்தாலும், கேட்கிற நாம் அவருடைய பிள்ளையாயிருக்க வேண்டுமே. அவரோடு நெருங்கியிருக்க வேண்டும். தேவைக்கு மட்டும் அவரைத் தேடாமல், எப்போதும் அவரோடு ஒரு ஐக்கியத்தைப் பராமரிக்கவேண்டும். இயேசுவை நேசிக்காமல், அவரை நமது தேவைகளுக்கான பாலமாக உபயோகப்படுத்துவோமென்றால், நம்மிடம் ஏமாறும் அளவிற்கு அவர் ஒன்றும் சாதாரண மனிதனல்ல. நம் இருதயத்தையே ஸ்கேன் செய்து பார்ப்பவர். இயேசுவை நேசிப்பதற்கும், அவரை உபயோகப்படுத்துவதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.
நீதி 28:9 சொல்கிறது, வேதத்தை கேட்காதவனின் ஜெபம்
கேட்கப்படாதாம். வேதத்திற்கு கீழ்ப்படிந்து நாம் வாழவேண்டும். ஏசாயா 1:15 ல் சொல்கிறார், நீங்கள் எவ்வளவு ஜெபித்தாலும் கேட்கமாட்டேன் என்று. காரணம், அவர்கள் தேவனுக்கு பிரியமில்லாததைச் செய்தார்கள். வேதத்தைக் கேளுங்கள், தீமையை விட்டு விலகுங்கள், பாவங்களை கழுவி சுத்திகரியுங்கள் என்றெல்லாம் அதைத் தொடர்ந்து வருகிற வசனங்களில் தேவன் சொல்கிறார். நம்மைப் பற்றிய எந்த கவலையுமின்றி, ‘தேவன் எனது ஜெபத்தை மட்டும் கேட்பதில்லை. அடுத்தவருக்கு செவி கொடுக்கிறார்” என்று பரிதாப உணர்வு ஏற்படுத்த முயற்சித்தால், கடைசி வரை புலம்பிக் கொண்டிருக்கவேண்டியது தான்.
மறுபடியும் சொல்கிறேன், ஜெபம் தேவனை நாம் மாற்றுவது அல்ல, தேவன் நம்மை மாற்றுவது.
எனவே அவருக்கு பிரியமாய் நடந்து, வேதத்தின் வழி நடந்து, அவரை உண்மையாய் நேசிப்போம். பிறகு பாருங்கள், நம் மனவிருப்பத்தைக் கூட அவர் நிறைவேற்றுவாராம். மனதில் ஆசைப்பட்டதைக் கூட அவர் செய்வார்;.
இரண்டாவது ஜெபிப்பது யாரிடம்?
இதென்ன முட்டாள்தனமாக இருக்கிறது? இயேசுவிடம் தானே
ஜெபிக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? நீங்கள யாரிடம் கேட்கிறீர்கள் என்பதை மறுபடியும் ஒருவிசை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். 2 தீமோத்தேயு 1:12ல் நான் விசுவாசிக்கிறவர் இன்னார் என அறிவேன் என்று பவுல் சொல்கிறார். நாம் யாரிடம் கேட்கிறோமோ, அவர் யார் என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும். தடவியாகிலும் தம்மை கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மை தேடும்படி அப்படிச் செய்தார் என்று அப்போஸ்தலர் 17:27ல் பார்க்கிறோம். தடவியாகிலும் நாம் அவரை அறிந்துகொள்ளவேண்டும் என்று நம் தேவன் விரும்புகிறார். யோவான் 8:24 ல் நானே அவரென்று விசுவாசியாவிட்டால், உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்று கூறப்பட்டுள்ளது. எனவே நாம் யாரிடம் கேட்கிறோம் என்பதில் தெளிவு இருக்கவேண்டும். நாம் கேட்கும் நபர் எப்படிப்பட்டவர் என்பதை புரிந்துகொண்டால், விசுவாசம் தானாக வந்துவிடும். நம்மை சிருஷ்டித்தவர், பெயர் சொல்லி அழைத்து அறிந்திருக்கிறவர், அற்புதங்கள் செய்பவர், இயற்கைக்கு மேற்பட்ட சக்தி உடையவர் அவர் என்பதைப் புரிந்துகொண்டால், புது நம்பிக்கையோடு அவரிடம் எல்லாம் கேட்கலாம். நாம் கேட்கும் இயேசுவின் முந்தைய சாதனைகளை வேதத்தில் தேடிப் பாருங்கள். நமது தேவைகளெல்லாம் அவருக்கு சாதாரணம் என்பது புரியும்.மூன்றாவது எதற்காக ஜெபிக்கிறோம்?
எதற்காக ஜெபிக்கிறோம் என்பது மிக மிக முக்கியம். சில நேரங்களில் நமக்கு தேவையில்லாதவற்றை கேட்டு கேட்டு கிடைக்காமல் சோர்ந்து போயிருக்கிறோம். நம்முடைய குறுகிய அறிவிற்கு எட்டிய வகையில் நாம் ஜெபிக்கிறோம். ஆனால் எல்லாம் அறிந்த தேவன் நமக்கு நன்மையானவற்றைத் தருகிறார்.
நாம் விரும்புவதை நாம் கேட்கிறோம்
தேவன் நமக்கு தேவையானதைத் தருகிறார்
நமக்கு நம்மின் கடந்தகாலமும், நிகழ்காலமும் தெரியும். தேவனுக்கோ நமது எதிர்காலமும் தெரியும். எனவே நமக்கு எதைத் தரவேண்டுமென்பது நம்மை விட அதிகமாக அவருக்குத் தெரியும். நமது ஜெபங்கள் கேட்கப்படாததற்கு பிண்ணனியில் சில நல்ல நோக்கங்களும் இருக்கலாம்.
இஸ்ரவேலர் தங்களுக்கு இறைச்சி வேண்டும் என்று மோசேயிடம் முறுமுறுத்தனர். தேவன் அவர்கள் ஜெபத்தை(!) கேட்டு அவர்களுக்கு இறைச்சி கொடுத்தார். ஆனால் அது அவர்கள் வாயில் இருக்கும்போதே கோபத்தில் அவர்களில் பலரை அழித்துப் போட்டார் (எண்11ம் அதிகாரம்). இங்கு இவர்களின் ஜெபத்தை தேவன் கேட்டதால், இவர்கள் தேவனுக்கு பிரியமானவர்கள் என்றில்லை.
அதே நேரம் மோசே பிறக்கும் தருவாயில், பிறக்கும்
ஆண்பிள்ளைகள் எல்லாம் கொல்லப்படவேண்டும் என்ற சட்டம் இருந்தது. மோசே வயிற்றில் இருக்கும்போது, மோசேயின் தாயாகிய யோகபேத்தின் ஜெபம் என்னவாக இருந்திருக்கும்? நமக்கு ஒரு பெண் பிள்ளை பிறந்தால் நன்றாயிருக்குமே என்று பெண் குழந்தைக்காகத் தான் ஜெபித்திருப்பாள். அவள் ஜெபம் கேட்கப்படவில்லை. பிறந்ததோ ஆண் குழந்தை. ஆனால் அந்த ஆண் குழந்தையைக் கொண்டு தான் இஸ்ரவேல் தேசமே மீட்கப்பட்டது. இங்கு தேவன் ஜெபத்தைக் கேட்காததால், தேவனுக்கு பிரியமானவள் இல்லை என்றாகிவிடாது.
பத்து வயது பையன் பல்சர் பைக் கேட்டால் நாம் வாங்கிக் கொடுப்போமா? அது போல தான் சில நேரங்களின் நமது குழந்தை தனமான ஜெபங்கள் கேட்கப்படாமல் போகின்றன.
நாமோ மீண்டும் மீண்டும் அவருக்கு சித்தமில்லாததையே கேட்டு
அவரை வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறோம். இஸ்ரவேலரை சபிக்கும் படி பிலேயாமை அழைத்த போது தேவன் அவரைப் போக வேண்டாம் என்று தடுத்தார். ஆனால் மீண்டும் போகலாமா? என்று தேவனிடம் கேட்டபோதோ போ என்று சொல்லிவிட்டு பின் உருவிய பட்டயத்தோடு வந்து தடுத்தார். சில நேரங்களில் நாம் தேவனுக்கு பிரியமில்லாதவற்றை விடாப்படியாகத் தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருந்தால், வேண்டாவெறுப்பாக தந்துவிடுவார். ஆனால் விளைவு மோசமாயிருக்கும்.
நம்மைப் படைத்த தேவனுக்கு நம்மைக் குறித்த சித்தம் இருக்கிறது என்பதையும் ஜெபிக்கும்போது, நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிலர் ஜெபிப்பதை பெருமையாகக் கருதுவர். சாட்சியாகச் சொல்வதில் தவறில்லை. ஆனால் தம்பட்டம் அடிக்கக் கூடாது. நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.மத் 6:6.
ஜெபம் என்பது நமக்கும் தேவனுக்குமிடையேயான ஓர் உன்னத உறவு. அதை சரியான விதத்தில் பயன்படுத்த வேண்டும்;. அது வார்த்தைப் பிரயோகத்தைச் சார்ந்தது அல்ல. உள்ளத்தின் ஏக்;கம் சார்ந்தது.
நம்மைச் சுற்றியிருக்கும் மற்றவரின்; கவனத்தை ஈர்க்க நாம் ஜெபித்தால் மற்றவரின் கவனத்தை தான் ஈர்க்கமுடியும், தேவனின் கவனத்தை அல்ல.
எப்போது ஜெபம்?
நீங்கள் ஜெபித்தது எப்போது? ஏனென்றால் சிலநேரங்களில் நமது ஜெபத்தின் பதில் நம்மை அடைவதற்கான சரியான நேரத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கும். நாமோ, ‘ஜெபத்திற்கு பதில் கிடைக்கவில்லை, தேவன் மோசம்”; என்று சொல்ல ஆரம்பித்துவிடுகிறோம். தேவன் தாமதிக்கிறார் என்றால் அதில் ஒரு அர்த்தம் இருக்கும். சரியான காரியத்தை சரியான நேரத்தில் செய்பவர் அவர். சில நேரங்களில் என்றோ ஒருநாள் நாம் ஜெபித்து நாம் மறந்துபோனபிறகு கூட ஜெபத்திற்கு பதில் கிடைத்திருக்கிறது.
தேவனின் பார்வையில் சரியான நேரம்,
நமது பார்வையில் தாமதமாகத் தோன்றலாம்.
ஆனால் அது சரியானதே.
இறுதியாக,
தேவன் நம் ஜெபத்தை இன்றளவும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால் ஜெபம் கேட்கப்படவில்லையென்று நாம் உணர்ந்தோமென்றால், நம்மை சீர் தூக்கிப் பார்க்கவேண்டும், நமக்கும் அவருக்குமிடையேயான உறவு சரியாயிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும், நாம் கேட்கும் காரியம் சரியானது தானா? நிச்சயமாய் அது நமக்கு தேவைதானா? என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஜெபத்தின் பதில் நம்மையடைய சரியான நேரத்தை எதிர்பார்த்திருக்கிறதா? என்பதையும் யோசிக்க வேண்டும். ஜெபிக்கிறதை மட்டும் ஒருபோதும் நிறுத்தி விடாதீர்கள்.





Super.. it's true
ReplyDelete