அமெரிக்காவில் ஆரம்பித்து , இந்தியாவிற்கு வந்து, தற்போது தமிழக மக்களின் இதயத்துடிப்பை எகிறச் செய்யும் நிகழ்ச்சியாக பிக்பாஸ் தமிழிலும் வந்திருக்கிறது. வித்தியாசமான துறையில் உள்ளவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் கொண்ட கலவையாக 15 பேர் கொண்ட குழு ஒன்று தயார்செய்யப்பட்டு, அவர்கள் 100 நாட்கள் ஒரு வீட்டில் தங்கியிருக்கவேண்டும். அந்த 100 நாட்களும் செல்போன், டி.வி, இண்டர்நெட் போன்ற எந்த எலக்ட்ரிக் சாதனங்களும் பயன்படுத்த முடியாது. வெளியுலகத் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டு இருப்பார்கள். நிர்வாகத்தினர் பங்கேற்பவர்களுக்கு கொடுத்திருக்கும் பொருட்களைத் தான் பயன்படுத்த முடியும்.
இந்த 100 நூறு நாட்களில் அவர்களுக்குள் நடக்கும் மோதல், காதல் , வாக்குவாதங்கள் , தனிப்பட்ட நடைமுறைகள் எல்லாம் காரசாரமாக இருக்கும். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் வெளியேற்றப்படுவார். அநுசரிப்பது, மற்றவர்களோடு பழகுவது, பிறரை மகிழ்விப்பது, சமயோசிதமாக முடிவெடிப்பது போன்றவற்றின் அடிப்படையில் மக்கள் ஆதரவோடு ஒருவர் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். அவருக்கு பரிசுகளும், பணமும் உண்டு.
இந்த ஷோவில் மிக முக்கியமான விஷயம், கழிப்பறை குளியலறை தவிர மற்ற எல்லா இடங்களிலும் கிட்டத்தட்ட 30 கேமராக்கள் அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணிக்கும். பேச்சுக்கள் எல்லாம் ஒட்டுக்கேட்படும். அவற்றில் முக்கியமானவற்றை டி.வியில் ஒளிபரப்பவும் செய்யும். பொதுவாகவே அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்று ஆவென்று பார்க்கும் தமிழக மக்களுக்கு , இந்த 100 நூட்களும் கொண்டாட்டம் தான். சரி பிக்பாஸ் பற்றி நான் எழுதியதன் காரணம் என்ன? விஷயத்திற்கு வருகிறேன்.
பிக்பாஸ் அல்லது பிக்பிரதர் நிகழ்ச்சி, ஏதோ ஒரு வீட்டிற்குள், 100 நாட்கள், 15 பேர், 30 கேமரா என்று நடைபெறுகிறது. ஆனால் உண்மையில்,நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையுமே பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
பிக்பாஸ் நிகழ்ச்சியே நம்ம வாழ்க்கையின் மினியேச்சர் தான்.
நம்ம பிக்பாஸ் யாரு? வேற யாரு பாஸ_க்கெல்லாம் பாஸான இயேசு தான் நம்ம பாஸ{.இந்த உலகம் தான் அந்த வீடு. இயேசு நமக்கு தேவையான எல்லாவற்றையும் வைத்துவிட்டு பிறகு தான் மனிதனைப் படைத்தார். இந்த உலக வீட்டில் நமக்குத் தேவையான எல்லாமே இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் வீட்டிலுள்ள எந்த பொருளையும் சேதப்படுத்தக் கூடாதாம். ஆம் நாமும் இயற்கையை நாசமாக்காமல் வாழவேண்டும். பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.ஆதி 1:28
100 நாட்கள் நடக்கும் ஷோ, 80 வருடங்கள் நடக்கிறது. அந்த 80 வருடங்களில் நமக்கு தேவையானவற்றையெல்லாம் இயேசு நமக்கு தருகிறார். நமக்கு நிறைய பாடங்கள் கிடைக்கின்றன. மகிழ்ச்சியான, சோகமான சம்பவங்கள் நடக்கின்றன. மூத்தோரின் அனுபவங்கள் நமக்கு உதவியாகின்றன. எப்படியாவது நமது காலத்தை ஓட்டிவிட வேண்டும். அதுமட்டுமல்ல, போராடிக்கொண்டிருக்கும் மற்றவருக்கும் நாம் தான் உதவ வேண்டும். இயேசுவே வழி என்று காட்டவேண்டும். அதற்கும் மதிப்பெண்கள் உண்டு. சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை. அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது. சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ.1கொரி 9:16
15 பேர் கொண்ட குழு , கிட்டத்தட்ட 700 கோடிக்கும் மேற்பட்ட மக்களாக இருக்கிறார்கள். அவர்களோடு நாம் வாழும் நாட்களில் நாம் அனுசரித்துப் போகவேண்டியுள்ளது. நமக்கு மற்றவர்களின் நடவடிக்கை பிடிக்கிறதோ இல்லையோ, நாம் மற்றவர்களை சொல்லாலோ செயலாலோ காயப்படுத்தி விடக் கூடாது. தேவன் நமக்கு நல்ல உறவுகளை, நண்பர்களை, நலம்விரும்பிகளைத் தந்திருக்கிறார். அவர்களோடு இருக்கின்ற காலத்தில் உறவாடவேண்டும். யாரையும் பகைத்து நமக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. நமது வாழ்வை வண்ணமயமாக்கவே தேவன் உறவுகளையும் மனிதத் தொடர்புகளையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார். காதல், மோதல் , வாக்குவாதம் , சண்டை, பொறாமை, பெருமை எல்லாம் இருக்கும் தான் . நாம் அதையெல்லாம் மேற்கொள்ள வேண்டும். உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக. உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பவைகளையே என்றார்.மத் 19:19
30 கேமராக்கள் அவர்களைக் கண்காணிப்பது போல, பல நூறு கண்கள் நம்மை கண்காணிக்கின்றன. தேவதூதர்கள் குறிப்பெடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். மற்ற மனிதர்களும் நம்மை கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். நாம் எதைச் செய்தாலும் அது பதிவாகிக்கொண்டே இருக்கிறது. யாருக்கும் தெரியாது என்று நினைத்துக் கொண்டு நாம் தனிமையில் செய்ததெல்லாமே ஒருநாளில் வெட்ட வெளிச்சமாகும். எல்லாம் தேவனுடைய கண்காணிப்பில் இருக்கிறது. அங்கு வேஷமெல்லாம் போடமுடியாது. நாம் எப்படி நடந்துகொண்டோமோ அப்படியே காண்பிக்கப்படுவோம். ஆகாயத்தில் ஏறிப்போனாலும், பாதாளத்தில் படுக்கை போட்டாலும் அவருடைய பார்வையிலிருந்து தப்ப முடியாது. கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது.2நாளா 16:9
சிலர் வெளியேற்றப்பட்டுக்கொண்டிருப்பார்கள். இது நமக்கு வேதனை தரக் கூடியதாக இருந்தாலும், நாம் நமது பாதையில் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும். சிலரின் பிரிவு நம்மை மிகவும் பாதிக்கலாம். சிலரைப் பற்றிய பழைய நினைவுகள் நமது இதயத்தை அரித்துக்; கொண்டிருக்கலாம். அதை எல்லாம் தூக்கிப்போட்டுவிட்டு நமது பாதையில் நாம் கவனம் செலுத்தவேண்டும். தேவனைத் தவிர , யாரையும் எப்போதும் அதிகமாக சார்ந்து கொண்டிருக்க கூடாது. கவனம், நாம் சார்ந்திருக்கிறவர்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியேற்றப்படலாம். மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.சங் 118:8
சிலநேரங்களில் நாமும் கூட வெளியேற்றப்படலாம். எப்போது நமது நாட்கள முடிகிறதென்று தெரியாததினாலே நாம் இருக்கின்ற காலத்தை பயன்படுத்துவது நல்லது. ஒருமுறை இந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டோமென்றால், பிறகு அங்கு திரும்பிச் செல்லவே முடியாது. அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,எபி 9:27
அநேக பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தினமும் நடைபெற்றுக்கொண்டே இருக்கும். கவனம், நமது நோக்கம் சிதறிப் போய்விடக் கூடாது. இந்த உலகத்தில் எல்லாவற்றையும் அனுபவிக்க நமக்கு அதிகாரம் இருந்தாலும், எல்லாம் நமக்கு தகுதியாயிராது. தகுதியானதில் மட்டும் கவனம் வைக்கவேண்டும். கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.பிலி 3:14
பரிசுப் பொருட்கள் , அந்த நாட்கள் முடிவடையும்போது, சிறப்பாக செயல்பட்டவருக்கு பரிசுப்பொருட்கள் வழங்கப்படும். பரிசு என்றால் சாதாரண பரிசு அல்ல. மிகச் சிறந்த பரிசு. நம்ம நிகழ்ச்சியில் வென்றால் நித்திய ஜீவன் பரிசாக அளிக்கப்படும். மட்டுமல்ல பொற்கிரீடங்களும், நவரத்தினங்களும் பரிசாக அளிக்கப்படும். நமது காலம் முடிந்தபிறகு தான் பரிசு கிடைக்கும் என்பதை கவனத்தில் வைக்கவேண்டும். இப்பொழுதே பரிசு வேண்டும் என்று அடம்பிடிப்பது அறிவீனம். தண்டனையோ பரிசோ வாழ்வு முடிந்தபின் நிச்சயம் உண்டு. இவ்வுலக வாழ்விலும் சில போனஸ் பாயிண்ட்ஸ் உண்டு. இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.வெளி 22:12
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் , நம்ம பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் ஒத்துப்போகாத ஒரே ஒரு விஷயம் இருக்கு. அது , இந்த பிக்பாஸ் 100 நாள்னு ஒரு கணக்கு இருக்குது. ஆனா நம்ம நிகழ்ச்சில நம்ம பிக்பாஸ் எப்போ வேணா வருவேன்னு சொல்லிட்டு போயிருக்கிறாரு. அவர் வரும்போது என்னென்ன நடக்கும்னும் சொல்லியிருக்கிறாரு. அது எல்லாமே இப்போ நடந்திட்ருக்கு.அவர் வந்தவுடனே நிகழ்ச்சி முடிஞ்சிரும். எனவே இருக்கிறவரை உண்மையா இருப்போம். மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள். மத் 25:13
"நான் தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சில ஜெயிப்பேனு நம்பிக்க இருக்கு. ஏன்னா என் அப்பா ரொம்ப கஷ்டப்பட்டாரு எனக்காக. அவரு கைல காலுல எல்லாம் ஆணி அடிச்சாங்க. ஒரு பெரிய ஈட்டிய அவரு விலாவில குத்துனாங்க. ரொம்ப அடிச்சாங்க . ஆனா எல்லாத்தையும் அவர் எனக்காக பொறுத்துக்கிட்டாரு. என் மேல ரொம்ப நம்பிக்க வச்சு இந்த உலகத்துக்கு என்ன அனுப்புனாரு. அந்த நம்பிக்கைய வீணடிக்கமாட்டேன். நான் நிச்சயம் ஜெயிச்சு, பரிச அவர்ட்ட காட்டுவேன் . நான் அவருக்கு உண்மையா இருக்கிறதால ஜெயிச்சுருவேன்னு நம்பிக்க இருக்கு."
பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள். ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். 1கொரி 9:24

































