தேவனோடு உள்ள உறவிலிருந்து பிளவு ஏற்படுவதே பின்மாற்றம் ஆகும். பொதுவாக பின்மாற்றம் ஏன் வருகிறது என்று நாம் ஆராய்ந்தால், நம்முடைய கீழ்ப்படியாமையினாலும் பாவத்தினாலேயுமே தேவனை விட்டு நாம் விலகிவிடுகிறோம். நன்றாக புரிந்து கொள்ளுங்கள், தேவன் நம்மை விட்டு விலகவில்லை, நாமே அவரை விட்டு விலகுகிறோம். இயேசுகிறிஸ்து நம் எல்லாருக்காகவும் அடிக்கப்பட்டு, நம் அனைவருக்காகவும் இரத்தஞ்சிந்தினார். நாம் அனைவரும் இரட்சிக்கப்பட வேண்டுமென்பதே அவருடைய விருப்பமாயிருக்கிறது (1தீமோ 2:4). எனவே நம் தேவன் எப்போதும் நமக்காக ஆவலாய் காத்துக் கொண்டிருக்கிறாரென்பதை முதலாவது நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
அவர் பாவிகளை அல்ல, பாவத்தையே வெறுக்கிறார். பாவிகளை நேசிக்கிறார். பாவிகளை மனந்திரும்புதலுக்கு அழைக்கவே அவர் வந்தார் (மத் 9:13). ஆனால் பிசாசின் தந்திரம் என்னவென்றால், ‘நாம் பாவஞ்செய்துவிட்டோம், இனி அவ்வளவு தான், தேவன் என்னை வெறுத்து ஒதுக்கிவிடுவார்” என்ற எண்ணத்தை வாலிபர்களாகிய நமது இதயத்தில் விதைத்துவிடுவதே. தேவன் நம்மையல்ல, நமது பாவத்தையே அவர் முதுகுக்கு பின்பாக எறிந்துபோடுவார் (ஏசாயா 38:17).
பிசாசின் நோக்கம் நம்மை பாவஞ்செய்ய வைப்பது மட்டுமல்ல, தேவனிடத்திலிருந்து முற்றிலுமாய் விலகச்செய்து விடுவதே.
ஆதாம் பாவஞ்செய்தான், தேவன் வரும்போது அவரோடு
உறவாடமுடியாமல் வெட்கி நின்றான். நாமும் பாவஞ்செய்துவிட்டு தேவனோடு உறவாட முடியாமல் நம்மை நாமே மறைத்துக்கொள்கிறோம். ஆலயத்திற்கு செல்வதற்கு வெட்கம், ஊழியர்களை சந்திக்க தயக்கம், வேதத்தை தொடவே பயம், இப்படி தேவனை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகிச்சென்று விடுகிறோம். இவ்வாறு தேவனை விட்டு விலகிச் செல்வது நம்முடைய பாவங்களை அதிகரிக்கத்தான் செய்யுமே அல்லாமல் குறையச்செய்யாது. நாளாக, நாளாக தேவன்; நம்மேல் வைத்திருக்கும் மேலான நோக்கத்தை விட்டு வெகுதூரம் சென்றிருப்போம்.
தாவீதும், சவுலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சூழ்நிலையை சந்தித்தார்கள். சவுலை சாமுவேல் கண்டிக்கும்போது, சவுல் சாமுவேலிடம் நீர் என்னை கனம்பண்ண வேண்டும் என்கிறார்( 1 சாமு15:30). ஆனால் தாவீதோ நாத்தானால் எச்சரிக்கப்படும்போது, எல்லார் முன்பிலும் பாவஞ்செய்ததை ஒப்புக்கொண்டு (2 சாமு 12:13) தேவனோடு சீர்பொருந்தினான். பாவஞ்செய்தால் அதை அறிக்கை செய்து விட்டுவிட்டால் நாம் இரக்கம் பெறுவோம் (நீதி 28:13). எனவே நாம் எப்படிப்பட்ட பாவிகளாயிருந்தாலும் அவரை விட்டு ஓடக்கூடாது. அவரை நோக்கி ஓட வேண்டும். ஏனென்றால் உலகத்தின் சகல பாவங்களையும் நீக்கக்கூடியவர் இயேசு மட்டுமே(1 யோ 1:7)
இனி தேவன் என் ஜெபத்தைக் கேட்க மாட்டார், என்னை கைவிட்டுவிடுவார் என்கிற எண்ணத்தை முதலாவது மாற்ற வேண்டும்.
நான் பாவியாயிருப்பதால் தேவன் என்னை ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று சொல்வது, நான் வியாதியாயிருப்பதால் மருத்துவர் என்னை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று சொல்வதற்குச் சமம்.
நாம் அவரை நோக்கி சில அடிகள் எடுத்து வைத்தால் அவர் நம்மை நோக்கி ஓடி வந்து நம்மை அணைத்துக் கொள்வார். இளையகுமாரன் வீட்டிற்கு பயந்து தயங்கி வந்தபோது, தகப்பனார் ஓடி வந்து அணைத்;ததைப் போல, நாம் அவரிடத்தில் நெருங்குவதற்கான சிறு சிறு முயற்சிகளை எடுக்கும்போது, அவர் நம்மை ஆட்கொண்டு நடத்துவார்.
நான் நீதிமானான பிறகு தேவனிடம் வருவேன் என்று சொல்லாதே
தேவனிடம் வந்தால் தான் நீ நீதிமானாக மாற முடியும்.
‘என்னால ஜெபிக்க முடியல” , ‘பைபிள கைல எடுத்தாலே தூக்கம் வருது”, ‘முந்தி மாதிரி தேவன நேசிக்க முடில” இதெல்லாம் பின்மாற்றக்காரர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள். தேவன் நம்;மோடு செய்த உடன்படிக்கையை ஒருநாளும் மறப்பதில்லை. வேதத்தில் விசுவாசிக்க முடியாத மனநிலையில் இருக்கும் ஒருவர் ‘ஆண்டவரே என் அவிசுவாசம் நீங்க உதவி செய்யும்” (மாற்கு 9:24) என்று கேட்டதும் உடனே தேவன் உதவினார். அதுபோல நாமும் தேவனே நான் உம்மை நேசிக்க உதவி செய்யும், ஜெபிக்க உதவி செய்யும், ஊழியம் செய்ய உதவி செய்யும் என்றெல்லாம் அவரிடமே கேட்கும்போது நிச்சயம் தேவன் உதவி செய்வார். சர்வவல்லவரிடத்தில் நாம் மனந்திரும்பினால் திரும்பவும் கட்டப்படுவோம் (யோபு 22:23). உலர்ந்து போயிருக்கும் நம் வாழ்வை செழிப்பாக்க நம் இயேசுவால் மட்டுமே முடியும்.
‘நாளை நாளை” என்று நாளை தள்ளிக்கொண்டிராமல்,
இன்றே இயேசுவோடு சீர்பொருந்துவோம். தேவனுடைய வருகை சமீபமாதலால், அவரை இன்றே தேடுவோம். நம்மை அறிந்த, நம்மைப் புரிந்த தேவன் அவர். பின்மாற்றத்திலிருந்து மீளவேண்டும் என்கிற உங்களின் இதய தாகத்தை அவர் அறிந்திருக்கிறார். எனவே இப்பொழுதே அவரை நோக்கிப் பாருங்கள். மனம்விட்டு அவரோடு பேசுங்கள். சிறுபிள்ளையைப் போல உங்களைத் தாழ்த்துங்கள். தேவனைவிட்டு பிரிக்கும் காரியத்தை வேரோடு பிடுங்கி எரியுங்கள். அவரோடு சீர்பொருந்த விடாதபடி பிசாசு ஏற்படுத்துகிற எல்லாத் தடைகளையும் வைராக்கியத்தோடு மேற்கொள்ளுங்கள். வெற்றி நமதே...... நம்மை காண்கிற லகாய்ரோயி ,நம் தாகம் தீர்க்க நீரூற்றாய் வருவார். ஆமென்....
ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு.ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக@ இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.வெளி 2:4,5
அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணைகொடுத்தேன்@ தன் வேசிமார்க்கத்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை.வெளி 2:21



No comments:
Post a Comment