Wednesday, 14 June 2017

"ஐயோ தீ!"

பஞ்ச பூதங்களில் நாம் மிகவும் அஞ்சுவது நெருப்புக்குத்தான். ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்று வசனம் பேசுபவன் கூட நெருப்பால் சாவு என்றால் கொலை நடுங்குவான். மனிதன் இயற்கையை எப்படி தான் திரித்தாலும், நெருப்பிடம் மட்டும்; அவன் பருப்பு வேகவில்லை. நெருப்பு தனக்குமுன் இருக்கும் எல்லாவற்றையுமே அழிக்கக் கூடியது. சரி இப்போது நெருப்பின் பெருமையை பேச வேண்டிய அவசியம் என்ன? இப்பதிவை எழுதிக் கொண்டிருக்கும் 2017 ஜுன் 14ம் தேதி மட்டுமே தொலைக்காட்சியில் பல தீ விபத்துக்கள். லண்டனில் 27 மாடிக்கட்டிடம் எரிந்தது. தமிழகத்தில் நிலக்கரி சுரங்கம் எரிந்தது. விறகு வைத்திருந்த குடோன் எரிந்து நாசமானது. சில நாட்களுக்கு முன் பெரிய துணிக்கடை முழுவதுமாக எரிந்து முடித்தது.

தீ விபத்துக்கள் எப்போதும் நடப்பது தானே , அதை அணைக்கத் தானே தீயணைப்பு என்ற தனித்துறையே இருக்கிறது என்று நினைப்பீர்களென்றால், அதற்கான பதில், முன்னெப்போதையும் விட இப்போது தீ விபத்துகள் அதிகமாகியிருக்கின்றன. 

முன்பு தீ எரிந்தால், வைக்கோல் போரிலோ,

ஓலை வீடுகளிலோ ,சருகுகளிலோ பற்றி எரியும். சில மணிநேரங்களில் எரிந்து முடிந்து கரியாகிவிடும். எல்லாம் கரியாகவும் ,சரியாக தீயணைக்கும் கருவியோடு வீரர்கள் வந்து நிற்பார்கள். ஆனால் இப்போது அப்படியல்ல. நாள் கணக்கில் நின்று எரிந்து கொண்டிருக்கிறது. அமைச்சரே சென்று எரிவதைப் பார்க்குமளவு அவகாசம் ஏற்பட்டிருக்கிறது. எரிவதும் சாதாரண ஓலைப்பந்தலல்ல, பெரிய கடைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலைகள். இவையெல்லாம் ஏன் எரிகின்றன?

ஏன் எரிகின்றது என்று கேட்டால் பல காரணம் பல்லைக் காட்டும். ஐடி ரெய்டுக்காக எரிக்கப்படுகிறது, பொறாமையால் எரிக்கப் படுகிறது, ரகசியங்களை காக்க எரிக்கப்படுகிறது, மின்கசிவு, கவனக்குறைவு. காரணங்களை வரிசைப் படுத்திக் கொண்டே போகலாம். ஆனால், ஏன் இப்படி நின்று எரிகிறது. தீ சில நிமிடங்களில் எல்லாவற்றையும் வசப்படுத்தி எரிந்து கருக்கி அதுவாகவே அணைந்துவிடும். ஆனால் சமீப காலங்களில் எரிந்துகொண்டேயிருக்கிறதே ஏன்?

எரிகிறது என்று சொல்வதை விடவும் உருகுகிறது எனலாம். எது உருகும்.  பூமிக்கடியில் இருக்கிறவைகளை எல்லாம் எடுத்து பிளாஸ்டிக் உட்பட பல பொருள் மூலங்களை மனிதன் இந்;த நூற்றாண்;டில் செய்ய ஆரம்பித்து விட்டான். நாம் பயன்படுத்தும் எல்லாம் பிளாஸ்டிக் மயம். இவை பெரும்பாலும் உருகக்கூடியவை.  பூமி முழுதும் அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டிருக்கிறது என்பது ( 2 பேதுரு 3:7) நாம்; அறிந்ததே. அதற்கேற்ப அக்கினி எளிதில் பற்றிக்கொள்ளக் கூடியதும், எளிதில் அணைக்க முடியாமல் நெடுநேரம் எரியக் கூடியதும், உருகக் கூடியதுமான பொருட்களை பூமி முழுதும் பரப்பி வைத்திருக்கிறான்.

மனிதனின் இந்த செயல்தான் வழக்கம்போல் மனித இனத்துக்கே வினை வைக்கிறது. திடீர் திடீர் என்று ஏதாவது எரிகிறது. அணைத்தால் அடுத்த இடத்தில் எரிகிறது. 2பேதுரு 3:10,12 ன் படி பூதங்கள் உருகுகிறது. முன்பு உருகும் பொருள் ஒன்றுமே பூமியின் மேல் இருக்காது. இப்போது பெரும்பாலானவை உருகக்கூடிய பிளாஸ்டிக் மற்றும் அதைச் சார்ந்த பொருட்களே. பூமி எரிந்து அழிகின்றது. 

இப்போது நடக்கும் பல தீ விபத்துகளில் பெருமளவில் உயிரிழப்புகள் இல்லை என்பது கொஞ்சம் ஆறுதலான விஷயம். ஆனால் அதிர்ச்சியூட்டும் ஒரு உண்மை என்னவென்றால், இது ஆரம்பம் மட்டுமே. சொல்லப்போனால் ட்ரெய்லர் தான். இன்னும் அநேக இடங்கள் திடீர் திடீர் என்று பற்றியெறியும். அதற்குத் தோதாக மனிதன் தன்னையேயறியாமல் அணு உலைகள், மின் நிலையங்கள், தொழிற்சாலைகள் என்று கட்டிவைத்திருக்கிறான். போதாக்குறைக்கு ஒவ்வொரு நாடும், ஆயுதப் பரிசோதனை நடத்திக்கொண்டிருக்கின்றது. அனைத்து ஆயுதங்களுமே நெருப்பின் வகைகளைக் கக்குபவை தான்.கட்டுப்பாட்டை மீறும் தீவிபத்துகள் நடக்கலாம். ஐயோ இப்படி பயமுறுத்துகிறீர்களே என்று பயப்படாதீர்கள். எப்போதுமே வருமுன் காப்பது சிறந்தது. விஞ்ஞானிகளுக்கும் நெருப்பிலிருந்து தப்ப வைப்பது தான் பெரிய சவாலாக இருக்கிறது. நெருப்பால் சேதம் வராமல் தடுக்க தங்களாலான எல்லா முயற்சிகளையும் முன்பைவிட அதிகம் எடுக்கிறார்கள் என்பதிலேயே , நெருப்பின் விபரீதத்தை அவர்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள் என்பது தெரிகிறது.
ஏன் இப்படி நடக்கிறது. இரண்டு காரணங்கள். நரகம் முழுக்க முழுக்க நெருப்பாலும் கந்தகத்தாலும் ஆனது. எனவே நெருப்பால் ஏற்படும் சேதத்தைப் பார்ப்பவர்கள் திருந்த வாய்ப்புண்டு. இன்னொன்று, இந்த பூமி ஏற்கனவே நீரால் அழிந்தது . இனி நீரால் அழிக்கமாட்டேன் என்று தேவன் நோவாவோடு ஒரு உடன்படிக்கை செய்தார். இது நெருப்பால் தான் அழியப் போகிறது. அதற்கான திட்டங்கள் மனிதக்கரங்களாலேயே உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நினைத்துப் பாருங்கள் மொத்த உலகமும் கொத்தாக எரிவதை. 

நாம் பயப்படவேண்டியதில்லை. நம்முடைய வேலையெல்லாம், ஆயத்தப்படுவதும் ஆயத்தப்படுத்துவதும் தான். கடைசிக் காலத்திற்கான ஒவ்வொரு அடையாளத்தை நாம் பார்க்கும்பொழுதும், நமக்கு நினைவுக்கு வரவேண்டிய வசனம், அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும். அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும். நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும். பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.வெளி 22:11


குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ் செய்யுங்கள். கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும். அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள். சங் 2:12



No comments:

Post a Comment