Wednesday, 14 June 2017

பிறந்தவர் யார்?

   
 உலகம் முழுவதும் வெகு விமரிசையாய்க் கொண்டாடப்படும் பெரிய பண்டிகை கிறிஸ்துமஸ். கிறிஸ்துமஸ் கொண்டாடலாமா? கூடாதா? என கிறிஸ்தவர்களுக்குள் வாக்குவாதம் நடந்துகொண்டிருக்க, கிறிஸ்துவை அறியாதோரிடமிருந்து கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. காலத்தை சிலர் கச்சிதமாய்ப் பயன்படுத்தி இயேசு பற்றிய சுவிசேஷத்தை அறிவித்துக் கொண்டிருக்கின்றனர். சிலரோ தங்கள்ஆடம்பரத்தை இயேசுவுக்கே அறிவித்துக் கொண்டிருக்கின்றனர்.  இயேசுவின் பெயரால் உதவிகள் செய்யப்படுகின்றன. சில கிறிஸ்தவர்கள் தங்கள் சொந்த சபையையே தேடி அலைந்து கண்டுபிடித்தமர்கின்றனர்.  எது எப்படியோ கிறிஸ்து பிறந்தாரென்பது முழு நிச்சயமான உண்மை. அவர் எப்போது பிறந்தாரென்பது நமக்கு தெரியாது.  ஆனால் ஏன் பிறந்தாரென்று தெரியும். அவர் எந்த சூழ்;நிலையில் பிறந்தாரென்பது தெரியாது, எந்த சூழ்நிலையை உருவாக்கப் பிறந்தாரென்று வேதம் வாயிலாகக் கற்கிறோம். அவர் பிறந்த நாளென்று உலகம் ஒரு நாளை சொல்கிறது. அந்த நாளில் பிறந்தாரோ இல்லையோ அவர் பிறந்தார். எனவே இப்படிப்பட்ட நாட்கள் மூலம் அவர் பிறப்பு தியானிக்கப்படுகிறது. அவர் பிறப்பைப் பற்றி பேசப்படுகிறது. வித்தியாசப்பட்ட கோணங்களில் அவர் பிறப்பு அலசப்படுகிறது. அவர் பிறந்ததற்கான நோக்கமும் சில இடங்களில் ஆராயப்படுகிறது. எப்படியோ கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார் . அதனால் நான் சந்தோஷப்படுகிறேன் (பிலி 1:18).  பீடிகையை வைத்து நீங்களே கண்டுபிடித்திருப்பீர்கள். ஆம் . நானும் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி, உங்கள் கவனத்தைப் பெற்று,  அவர் பிறப்பைப் பற்றி பேசப்போகிறேன்.

                   நம்முடைய தியானம் சற்று வித்தியாசமானது. அவர் ஏன் பிறந்தார்? எங்கு பிறந்தார்? எப்போது பிறந்தார்?  எதற்கு பிறந்தார்? எப்படி பிறந்தார்? யாருக்காக பிறந்தார்?  இப்படி எல்லாம் பல கோணங்களில் டிசம்பர் மாத தொடக்கத்திலிருந்தே தியானிக்கப்பட்டு வருகிறது. கேள்வி வகைகளில் மிச்சமிருக்கும் ஒன்று, அதிகம் தியானிக்கப்படாத ஒன்று ? எது.  பலே . நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்கள்.  அது தான். நீங்கள் நினைப்பது சரிதான். யார் பிறந்தார்? என்பது தான். என்ன பிரதர் இதெல்லாம் ஒரு கேள்வியா? யார் பிறந்தார்னு தெரியாமலா இருக்கோம்?  இயேசு தானே பிறந்தார். இதச் சொல்ல வந்துட்டீங்களாக்கும். இப்படி நினைக்கிறீர்கள். பிறந்தவர் யார்? என்றால் 5 வயது பிள்ளையும் சொல்லும் இயேசு என்று. இப்போது இதே கேள்வியை சற்று மாற்றிக் கேட்கிறேன். இந்த இயேசு யார்?

                  இப்போது தெளிவாக கட்டுரையின் கருத்திற்கு வருகிறேன். நமக்காக பிறந்தவர் இயேசு என்று தெரியும். நமக்காக பிறந்தவர் குமாரனா? அல்லது பிதாவா?.. அதிர்ச்சியாக இருக்கும் சிலருக்கு. இதெல்லாம் ஒரு கேள்வியா? நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். குமாரன் கொடுக்கப்பட்டார் (ஏசாயா 9:6) என்று ஒவ்வொரு கிறிஸ்துமஸ்ஸிலும் வாசிக்கிறோம். தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.யோவா 3:16. இது எல்லாருக்கும் தெரிந்த வசனம். மேலும் நாம் அடிக்கடி வாசிக்கிற வசனம், மத்தேயு 1:21 , அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.  ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். இது போல் இன்னும் பல வசனங்கள் இருக்கிறது. எனவே நமக்கு தெரிந்திருந்த  ஒரு விஷயம் , பிறந்தவர் குமாரனே என்று. 

                  இந்த உலகத்தில் பிறக்கும் அனைவருமே குமாரர்கள் தான். இந்த உலகத்தில் நாம் பிறந்தாலே நாம் குமாரர் தான். நாம் நம் தாய் தந்தையர்க்கு குமாரர் , குமாரத்திகளாக இந்த உலகத்தில் பிறக்கிறோம். லூக்கா 3 : 22 முதல் 38 வரை வாசித்தால் இதன் விளக்கம் புரியும். இந்த உலகத்தில் பிறந்த நாமனைவரும் குமாரர்களாய் இருக்கிறோம். மாம்ச சரீரத்தில் நாம் பிறக்கும்போதே நாம் குமாரர்களாகி விடுகிறோம். எனவே மாம்ச சரீரத்தில் இந்த உலகில் நமக்காக பிறந்த இயேசுவும் குமாரன் என்பதில் சந்தேகமில்லை. இப்போது மறுபடியும் கேட்கிறேன், பிறந்தவர் யார்? யார் பிறந்தார்? குமாரனாக இந்த உலகில் வந்து பிறந்தவர் யார்? அவர் ஏற்கனவே குமாரனாக இருந்தவர் தானா? அல்லது வேறொரு ஸ்தானத்திலிருந்து , மண்ணில் வந்ததால் குமாரன் ஆகிறாரா? அது உண்மையென்றால், அவர் இயேசு என்னும் பெயரில் மண்ணில் பிறக்கும் முன் அவர் யார்? குழப்புவது போல் இருந்தால் மீண்டும் ஒருமுறை பதிவைப் படியுங்கள்.

                  பொதுவாகவே இரகசியம் என்பதன் அர்த்தம், அனைவருக்கும் தெரியாதது, குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே தெரிவது. எல்லாருக்கும் தெரிந்திருந்தால், அது இரகசியம் அல்ல. உரிமையான சிலருக்கு மட்டும், தெரிவது தான்இரகசியம். இரகசியத்தைக் கண்டுபிடிக்க நாம் சற்று முயற்சி எடுக்க வேண்டும். வேதத்திலேயும் அநேக இரகசியங்கள் இருக்கிறது. அது தெரிந்தால் தான், நமக்காக பிறந்த இயேசு யார் என்று நாம் அறிந்துகொள்ள முடியும். வேதத்திலே, 1 தீமோத்தேயு 3:16 ல் ,அன்றியும் தேவபக்திக்குரிய இரகசியமானது, யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது . என்று எழுதப்பட்டிருக்கிறது. அந்த மேன்மையான, தேவபக்திக்குரிய இரகசியம் என்னவென்றால், தொடர்ந்து வாசிக்கும்போது தெரிகிறது,தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.1தீமோ 3:16. தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார். ஆமென். நாம் அறிந்துகொள்ளவேண்டிய இரகசியம். நம் தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார். நமக்கு இருப்பது எத்தனை தேவர்கள்? இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.உபா 6:4. ஒரே தேவன் உண்டு. அவரைத் தவிர வேறொரு தேவன் இல்லை (மாற் 12:32). நமக்கு ஒரே ஒரு தேவன் உண்டு. அவர் யார்? அவர் தான் பிதா. யோவான் 8: 41 ஒரே பிதா எங்களுக்குண்டு. அவர் தேவன். இன்னும் அநேக வசனங்கள் இருக்கிறது. எனவே பிதா தான் தேவன்.  தேவன் தான் பிதா. இப்போது 1தீமோத்தேயு 3: 16 ஐ நாம் இரகசியம் அறிந்தவர்களாய் வாசிப்போமானால், பிதாவாகிய தேவன், மாம்சத்தில் இயேசுவாக வெளிப்பட்டார். அல்லேலூயா.

                  கிறிஸ்துமஸ் பிறப்பின்போதெல்லாம் நாம் வாசிக்கும் வசனம், ஏசாயா 9:6, நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார். கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும். அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். இந்த வசனத்தை நன்றாக கவனித்தீர்களா? பாலகன் பிறந்தார், குமாரன் கொடுக்கப்பட்டார் என்று சொல்லிவிட்டு இறுதியில் சொல்கிறது, அவர் நித்திய பிதா என்று. நித்திய பிதா என்றால் என்ன? நித்திய நித்தியமாக அவரே பிதா. குறிப்பிட்ட காலத்துக்கு அல்ல. எல்லா காலத்திற்கும். அந்த பிதா யாரென்றால், அவர் தான் கொடுக்கப்பட்ட குமாரன்.  இன்னொரு வகையில் சொல்வதென்றால், குமாரனாம் இயேசுகிறிஸ்து தான் பிதா.

                  பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார் (எபி 2:14). பிள்ளைகளாகிய நாம் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, நம்மை படைத்த பிதாவாகிய அவரும், நம்மைப் போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடைய இயேசுவானார். பிள்ளைகள் என்று சொல்லப்பட்டிருப்பதால், அவர் என்ற பதம் பிதா என்றாகிறது. (உதாரணம், வேலையாள் என்று வந்திருந்தால், அவர் - எஜமான்) பிதாவாகிய அவர், பிள்ளைகளாகிய (குமாரர்களாகிய) நமக்காக, குமாரரானார். அல்லேலூயா.  ஆதியிலே வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய தேவன், நம் மேல் நேசமாயிருந்து அவரது குமாரனை அனுப்பினார் என்பதையே அவரது அன்பின் அடையாளமாய் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அவரே நமக்காக இறங்கி வந்து , நம்மை குனிந்து தூக்கினாரென்பது எவ்வளவு ஆச்சரியம். வேறொருவரை அனுப்பாமல் அவரே இறங்கி வந்து நம்மை நேசித்தார் அவர்.

                  இப்போது கேட்கிறேன், பிறந்தது யார்? குமாரனா? பிதாவா? . ஆம் நமக்காக பிறந்தது பிதாவே. அவர் நித்திய பிதா.  நமக்கு ஒரே ஒரு தேவன் உண்டு. அவர் மாம்சத்திலே இயேசுவாக வெளிப்பட்டார். இருவரும் தனித்தனி நபரல்ல. ஒருவரே. அதனால் தான், தேவன் ஒருவரே செய்யமுடிந்த காரியங்களை இயேசு செய்தார். 1ராஜாக்கள் 8:40 , தேவன் ஒருவரே மற்றவர்களின் இருதயத்தை அறியமுடியும். இயேசு அறிந்தார் . யோபு 9:8,ல் தேவன் ஒருவரே சமுத்திர அலைகளின்மேல் நடக்கிறவர் என்று பார்க்கிறோம். இயேசு நடந்தார். தேவன் ஒருவரே பாவங்களை மன்னிக்க முடியும் .இயேசு மன்னித்தார் (லூக் 5:21) 1கொரி 8: 4ன் படி ஒருவரையல்லாமல் வேறொரு தேவன் இல்லையென்று அறிந்திருக்கிறோம். நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர். யாக் 4:12. நியாயப்பிரமாணத்தை கட்டளையிட்டவர் பிதா. அவர் ஒருவரே இரட்சிக்கவும் (இரட்சகர் இயேசுவாக) அழிக்கவும் (நியாதிபதி இயேசுவாக)வல்லவர். என் மகிமையை வேறொருவனுக்கும் கொடேன் (ஏசா 42:8) என்று சொல்லியிருக்க, பிதாவின் மகிமையில் இயேசு வருவதின் (லூக்கா 9:26) இரகசியமும் இதுதான்.

                  எனவே நமக்காக பிறந்தவர் யாரென்பதை நாம் அறிந்துகொள்வது மிக அவசியம். என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன் (ரோமர் 9:5) இயேசுவாக நம் மத்தியிலே பிறந்திருப்பது மிகப் பெரும் ஆச்சரியம்.  அவர் பிறந்தது நமக்காக. வளர்ந்தது நமக்காக. மரித்ததும், உயிர்த்ததும் நமக்காக. இன்றும் நம்மை பரிசுத்த ஆவியாய் பரிவோடு நடத்துகிறார். அவர் ஒருவருக்கே சகல கனமும் வல்லமையும் துதியும் உண்டாவதாக . ஆமென். அல்லேலூயா.

No comments:

Post a Comment