Monday, 19 June 2017

செயல்படும் கிறிஸ்தவன்



  திட்டமிடுதலும் செயல்படுதலும் கிறிஸ்தவ வாழ்வின் இரு பக்கங்களாகும். அநேக கிறிஸ்தவர்கள் திட்டமிடாமலே செயல்படத் துடிப்பர். முடிவில் தோல்வியே மிஞ்சும். இன்னும் சிலரோ திட்டமிட்டுக் கொண்டே இருப்பார்கள். செயலில் இறங்கவே மாட்டார்கள். இதுவும் வீண்தான். பெரும்பாலான வாலிபர்கள் இரண்டாம் ரகத்தைச்  சேர்ந்தவர்கள் தான். சபையில் மிஷனரியைப் பற்றியும், ஊழியத்தைப் பற்றியும் பிரசங்கியார் பேசும் போது கர்த்தருக்காக ஏதாவது செய்யவேண்டுமென்று துடிப்பார்கள். கர்த்தருக்கென்று செய்ய பல காரியங்களைத் திட்டமிடுவார்கள். ஆனால் வீட்டிற்கு வந்ததும், மீண்டும் பழைய கதை தான். 

  இந்த கடைசி காலத்தில் , கர்த்தருக்கென்று வைராக்கியமாய் செயல்படும் வாலிபர்களைத் தான் தேவன் தேடிக் கொண்டிருக்கிறார். காலம் சமீபமாயிற்று. அவருடைய வருகை எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். இந்நேரத்தில் நம் திட்டங்களையெல்லாம் செயலாக மாற்ற வேண்டியது அவசியமாகிறது.  

  பொதுவாக திட்டமிடுபவர்களுக்கும், அதை செயலாற்றுபவர்களுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கிறது. திட்டமிட்டு செயல்படுத்தாதவர்களுக்கும், திட்டமிடாதவர்களுக்கும் பெரிதாக வித்தியாசம் ஒன்றுமில்லை. கர்த்தருக்கென்று திட்டங்களைத் தீட்டுவது நல்லது தான். ஆனால் அதை செயல்படுத்தாத வரை நாமும் திட்டமிடாதவர்களும் சமமாக தான் இருக்கிறோம். இதைத் தான் வேதம், அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலே தானே செத்ததாயிருக்கும். யாக் 2:17 என்று சொல்கிறது. விசுவாசம் நல்லது தான். ஆனால் கிரியை வேண்டுமே.

  நமது தேவன் இயேசு, நம்மை நேசிப்பதை வெறுமனே வாயினால் சொல்லிக்கொண்டிராமல், சிலுவையிலே நமக்காக மரித்து செயலில் காண்பித்தார். நாமும் தேவனே உம்மை நேசிக்கிறேன் என்று வெறுமனே வாயால் சொல்லிக் கொண்டிராமல் செயலில் காண்பிக்கவேண்டும். ஏனென்றால், தேவனுடைய ராஜ்யம் பேச்சிலேஅல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது.1கொரி 4:20.

  யுத்த களத்தில் முந்திப் போகிறவர்களுக்கு தான் வாய்ப்பு
அளிக்கப்படும். முக்கியத்துவம் கொடுக்கப்படும்.  பரிசுகள் வழங்கப்படும். நியாயாதிபதி புத்தகத்திலே 10 ம் அதிகாரம் கடைசி வசனத்தை நாம் வாசித்தோமென்றால், அம்மோன் புத்திரர் மேல் யுத்தம் பண்ண முந்திப் போகிறவனே தலைவனாயிருப்பான் என்று வாசிக்கிறோம். யெப்தா முந்தினான். தலைவனானான். 1நாளாகமம் 11: 6ல் எபூசியரை முறியடிக்கிறதில் எவன் முந்துகிறானோ, அவன் தலைவனாவான் என தாவீது சொல்ல, யோவாப் முந்தி ஏறித் தலைவனானான். கோலியாத்தை பார்த்து பெரும் சேனை நடுங்கிக் கொண்டிருக்க தாவீது விரைந்து செயல்பட்டு கோலியாத்தை வீழ்த்தினான். பினெகாஸ் ஈட்டியை எடுத்துக்கொண்டு விரைந்து செயல்பட்டான். வாதை நிறுத்தப்பட்டது. நாமும் விரைந்து செயல்படுவோம் . கர்த்தரின் ராஜ்யம் கட்டுவோம்.

செயல்படும் கிறிஸ்தவர்களுக்காக, தேவன் வரங்களையும், வல்லமைகளையும் வைத்துக் கொண்டு காத்திருக்கிறார். நாளை நாளை என்று நாளைத் தள்ளாதபடி இன்றே எழுந்து செயல்படுவோம், பலவான் கையின் அம்புகளாய்.



1 comment: